மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

சபரிமலை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்!

சபரிமலை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்!

சபரிமலை விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கேரள மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 49 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று (நவம்பர் 13) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது.

அப்போது, ஜனவரி 22ஆம் தேதி முதல் இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்குத் தடை விதிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இந்த கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கவில்லை என்பதால், மண்டல மற்றும் மகர விளக்கு சீசனின்போது மீண்டும் பிரச்சினை எதுவும் நடக்காமல் இருப்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரவுக்கு வரவேற்பு

கேரள பாஜக செய்தித்தொடர்பாளர் எம்.எஸ்.குமார் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றார். “இது சபரிமலையின் சடங்கு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக முன்வந்தவர்களின் நிலைப்பாட்டை முறையாக நியாயப்படுத்தியுள்ளது. கேரள அரசு தன் பிடிவாதமான நிலைப்பாட்டை விட்டுவிட்டு, பக்தர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க வேண்டும். 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை தந்திரிகள் கண்டரு ராஜீவரரு, கண்டரு மோகனரரு,கண்டரு மகேஷ் மோகனரரு ஆகியோர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றனர்.

இந்த உத்தரவு தவறுகளைச் சரிசெய்ய அரசாங்கத்திற்கு கடவுள் அளித்த வாய்ப்பாகும் என பந்தளம் அரண்மனை நிர்வாகக் குழுவின் தலைவர் பி.ஜி.சசிகுமார் வர்மா மற்றும் அதன் செயலாளர் எம்.கே.நாராயண வர்மா தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவு நல்ல வரவேற்பைப் பெற்றாலும், நவம்பர் 6ஆம் தேதி சபரிமலையில் வெடித்த கலவரம் போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க விழிப்புணர்வுடன் அரசாங்கம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் என்ற போர்வையில் வன்முறைக் கும்பல்கள் சபரிமலைக் கோயிலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. அவர்களை அடையாளம் காணுவதும் அவ்வளவு எளிதல்ல. அதனால், இதை அனைத்தையும் கருத்தில்கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon