மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

கலைஞர் மறைந்து 100 நாட்கள்: ஸ்டாலின் கடிதம்!

கலைஞர் மறைந்து 100 நாட்கள்: ஸ்டாலின் கடிதம்!

திமுக தலைவர் கலைஞர் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் தினமும் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

கலைஞர் மறைந்து இன்றோடு (நவம்பர் 14) 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மெரினாவில் உள்ள அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றையும் ஸ்டாலின் எழுதியுள்ளார்.

அதில், “கலைஞர் நம்மிடையே இல்லாமல் நூறு நாட்கள் கடந்த நிலையிலும் நம் நினைவெல்லாம் அவரே நிறைந்திருக்கிறார். கலைஞருக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கக் கூட்டங்கள் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் நடைபெற்றன. ஊடகத்தினர், இலக்கியகர்த்தாக்கள், திரைத்துறையினர், தமிழக அரசியல் தலைவர்கள், அகில இந்திய அரசியல் ஆளுமைகள் என அனைத்துத்துறை வித்தகர்களும் பங்கேற்ற அந்த மாபெரும் நிகழ்வுகளில், பன்முகத்தன்மை வாய்ந்த முத்தமிழறிஞர் கலைஞரின் ஆளுமையையும் ஊற்றெடுத்துப் பெருகிய ஆற்றல்களையும் அவை ஏற்படுத்திய அகன்று விரிந்த தாக்கங்களையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் வியந்து எடுத்துரைத்தபோது, இந்தியத் துணைக்கண்டம் இப்படியொரு தலைவரை இதுவரை கண்டதில்லை என்பது வரலாற்றின் பக்கங்களில் புதிய வரலாறாய்ப் பதிவானது" என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர், மகளிர், மாணவர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர், பலதுறைக் கலைஞர்கள் என தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும், சமூக நீதிப் போராளி கலைஞரால் தாங்கள் பெற்ற நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நல் மனதுடன் கட்சி மாச்சரியமின்றி புகழ் வணக்கம் செலுத்தினார்கள் என்று கூறியுள்ள ஸ்டாலின், “நடுநிலை தவறா தராசு முள்போல செயல்படும் நீதியரசர்களும் தங்கள் துறையில் கலைஞர் நிலைநாட்டிய சமூக நீதியை மனம் திறந்து பேசி புகழ் வணக்கம் செலுத்தியது இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையானதும், கலைஞரின் புகழ் வணக்க நிகழ்வுகளுக்கு முழுமை சேர்ப்பதுமாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியையும் இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் இரு பத்து (two decades) ஆண்டுகளையும் தன் பொதுவாழ்வினாலும் போராட்டங்களாலும் பொழுதளந்த மாபெரும் தலைவரின் திட்டங்களும் சாதனைகளும் பல நூற்றாண்டுகள் கடந்தும் பேசப்படுபவை என்பதால்தான், அவர் மறைந்து 100 நாட்களாகியும் புகழ் வணக்க நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

மேலும், கலைஞர் வகுத்துத் தந்த வழிமுறை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “1988ஆம் ஆண்டு அன்றைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு சென்னையில் கலைஞரின் பெருமுயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான பேரணியுடன் தொடங்கப்பட்ட தேசிய முன்னணிதான், 1989 தேர்தலில் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக வழி வகுத்தது. 30 ஆண்டுகள் கடந்த நிலையில், அதே ஆந்திர மாநிலத்தின் இன்றைய முதல்வரும் என்.டி.ஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு, இந்தியாவை ஆளும் மதவெறி-பாசிச சக்திகளிடமிருந்து நாட்டை மீட்கும் நல்லெண்ணத்துடன், மதச்சார்பற்ற வலுவான அணி அமைக்கும் முயற்சியாக கலைஞரின் மகனும் உங்களில் ஒருவனுமான என்னைச் சந்தித்தார். அந்த நல் முயற்சிக்கு திமுக துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துள்ளேன். அதே எண்ணத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயாலாளர் சீதாராம் யெச்சூரியும் என்னை சந்தித்து மதவெறி சக்திக்கு எதிரான மதநல்லிணக்க-சமயச்சார்பற்ற அணியை தேசிய அளவில் ஒருங்கிணைப்பது குறித்து உரையாடினார். நாட்டின் எதிர்காலத்தைக் காக்கும் நல்ல சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன” என பாஜகவுக்கு எதிரான அணி குறித்து தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு அரசு இன்று பெருங்கொள்ளைக் கூட்டத்தின் கையில் சிக்கி நாள்தோறும் சீரழிகிறது. இந்தியா மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களின் கொடூரப் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. இந்த இரண்டையும் ஜனநாயக வழியில் அகற்றுவதும் விரட்டுவதும்தான் நமது ஒரே இலக்கு. கலைஞர் கற்றுத்தந்த எதிர்நீச்சலையும் மேற்கொள்வோம். அவரிடம் பயின்ற கனிவும் துணிவும் பணிவும் வலிவும் பொலிவும் குறிதவறாத வியூகமும் மிக்க உழைப்பை எந்நாளும் வழங்குவோம்! தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் ஒரேநோக்குடன் துணை நிற்கும் தோழமை சக்திகளை அரவணைத்துக் களம் காண்போம்” என்று கூறியுள்ளார்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon