மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

தோற்ற ராஜபக்‌ஷே: அடுத்து ரனிலா, ராணுவமா?

தோற்ற ராஜபக்‌ஷே: அடுத்து ரனிலா, ராணுவமா?

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்‌ஷேவும் அவரது அமைச்சரவையும் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தனர். இதனால் ராஜபக்‌ஷே அவையில் இருந்து தோல்வி முகத்தோடு வெளியேறினார். நாடாளுமன்றத்தை நாளை காலை 10 மணிக்கு ஒத்தி வைத்துள்ளார் சபாநாயகர்.

இலங்கை அரசியல் வரலாற்றிலும், நீதிமன்ற வரலாற்றிலும் நேற்று முக்கியமான நாள். அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை முடக்கிய உத்தரவுக்கு நேற்று இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து இன்று (நவம்பர் 14) இலங்கை நாடாளுமன்றம் காலை 10 மணிக்கு கூடியது. அதற்கு முன்பே அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் சபாநாயகரான கரு ஜெயசூர்யா.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்‌ஷேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. அதிபர் செய்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உள்நாட்டில் இருந்தும் பல வெளிநாடுகளில் இருந்தும் குரல்கள் எழுந்தன. ராஜபக்‌ஷே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் அதிபருக்கு கோரிக்கைகள் குவிந்தன. ஆனால் ராஜபக்‌ஷேவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தையே கடந்த நவம்பர் 9 ஆம் தேதி இரவு கலைத்து, வரும் ஜனவரி 5 ஆம் தேதி பொதுத் தேர்தலை அறிவித்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட 13 வழக்குகளில் நேற்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட நிலையில்தான் இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. காலை 10 மணிக்கு கிட்டத்தட்ட ரனில் ஆதரவு எம்பிக்கள் எல்லாருமே வந்திருந்தனர். ரனில் கட்சியினரால் , ‘ஃபேக் பிரதமர்’ என்று அழைக்கப்படும் ராஜபக்‌ஷேவும் நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமருக்குரிய இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அவை ஆரம்பித்ததும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்‌ஷ்மண் கரில்லா, ஜே.வி.பி. கட்சி ஆகியவற்றின் சார்பில் பிரதமர் ராஜபக்‌ஷே தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் வழங்கி இன்றே ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் இன்றே வாக்கெடுப்பு நடத்தக் கூடாதென்று குரல் எழுப்பினர். நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று அவர்கள் கோரினர்.

இந்த களேபரங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே ராஜபக்‌ஷேவின் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்கள் ஏ.ஹெச்.எம். ஃபவுசி, பியசேனா காமேஜ், மனுஷ நாணயகரா ஆகியோர் ராஜபக்‌ஷே கண்ணெதிரே எழுந்து சென்று அவருக்கு எதிரணி இருக்கைகளுக்குச் சென்றனர். இது ராஜபக்‌ஷேவை அப்செட் ஆக்கியது. தனது ஆதரவாளர்களிடம் அங்கேயே ஆலோசித்தார். அப்போது தனக்கு மெஜாரிட்டி இல்லை என்பதும், சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தன் அரசுக்கு எதிராக 122 எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருப்பதும் ராஜபக்‌ஷேவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு மேலும் அங்கிருந்தால் அசிங்கம் என்று 11 மணியை நெருங்கும் நிலையில் ராஜபக்‌ஷே நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார். அவர் பின்னால் நமல் ராஜபக்‌ஷே உள்ளிட்ட எம்.பி.க்கள் பாதுகாப்பு அரண் அமைத்து வெளியே கொண்டு வந்துவிட்டனர்.

ராஜபக்‌ஷே சென்றபிறகும் அவரது ஆதரவு எம்.பி.க்கள் வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று முழக்கமிட்டனர். ஆனால் தன்னிடம் 122 எம்.பி.க்களின் கையெழுத்திட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் கையளிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா 11 மணிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது என்று அறிவித்தார்.

அதன் பின், “ராஜபக்‌ஷே அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி அடைந்துவிட்டது. ராஜபக்‌ஷே அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை” என்று அறிவித்தார். அத்தோடு அவையை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைத்துவிட்டார்.

அடுத்து ரனிலா, ராணுவமா?

அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பிரதமர் ராஜபக்‌ஷே இப்போது சட்ட ரீதியில் பதவியில் இல்லை. என்றாலும் அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முழு பெஞ்ச் விசாரிக்க வேண்டுமென்று ஒரு மனு தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் அதிபர் சிறிசேனா நேற்று இரவு முப்படைத் தளபதிகளோடு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் இலங்கையின் சட்டம் ஒழுங்கு முழுப் பொறுப்பையும் ராணுவம் எடுத்துக்கொள்ளுமாறு, நாட்டின் பதற்றமான இடங்களில் ராணுவத்தைக் குவிக்குமாறும் அதிபர் சிறிசேனா அறிவுறுத்தியதாகச் செய்திகள் வெளிவந்தன.

அதிபர் சிறிசேனா மீண்டும் ரனிலை பிரதமர் பதவிக்கு வரவிடக் கூடாது என்று முடிவோடு இருக்க, இன்றைய நாடாளுமன்ற வெற்றிக்குப் பிறகு அதிபர் சிறிசேனாவோடு சுமுகமாகப் பேசி ரனில் அரசைத் தொடருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி அதிபரின் நம்பிக்கைக்கு உரிய ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் சிலர் மூலம் இந்தப் பேச்சுவார்த்தை நடப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்‌ஷே பெரும்பான்மை இழந்துவிட்ட நிலையில் அடுத்து இயற்கை நீதிப்படி ரனில் ஆட்சி அமைப்பாரா அல்லது இலங்கை அரசில் ராணுவத்தின் கை ஓங்குமா என்பதே இலங்கைத் தீவு எழுப்பிக் கொண்டிருக்கும் முக்கியமான கேள்வி.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon