மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

இடைத் தேர்தல் எப்போது? உயர் நீதிமன்றம் கேள்வி!

இடைத் தேர்தல் எப்போது? உயர் நீதிமன்றம் கேள்வி!

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞர், சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் ஆகியோரின் மறைவையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புடன் இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படிப்பட்ட அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், “மழை காரணமாக தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதால் இடைத் தேர்தலுக்கான தேதியை தற்போது அறிவிக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், இடைத் தேர்தலை உடனே நடத்த வேண்டுமென வலியுறுத்தியிருந்தன.

இந்த நிலையில், இடைத் தேர்தலை நடத்த வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், “தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. பருவமழைக் காரணம் காட்டி தேர்தல் தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தில் பரிந்துரை செய்திருந்தார். இது ஏற்கக் கூடியதல்ல, எனவே இரு தொகுதிகளுக்கும் உடனே தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று (நவம்பர் 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தேர்தல் நடத்துவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம். திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்கவும், இடைத் தேர்தலுக்கான கால அட்டவணை இருந்தால் அதனை வரும் 26ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டனர். வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தனர்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon