மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய தில்ஷன்

ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய தில்ஷன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரான திலகரத்னே தில்ஷன், மஹிந்த ராஜபக்‌ஷேவின் கட்சியில் இணைந்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷேவும் அவரது ஆதரவாளர்களும் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தனர். இதனையடுத்து சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை ஒத்தி வைத்தார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் துவக்க வீரருமான திலகரத்னே தில்ஷன், பிரதமர் ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவாக அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சியில் (SLPP) இன்று (நவம்பர் 14) மாலை இணைந்துள்ளார்.

தில்ஷன் SLPP கட்சியின் உறுப்பினர் உரிமையைப் பெறுவதைப் போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவரது அரசியல் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இலங்கையின் கொழும்பு கெசட் ஊடகம் வெளியிட்டுள்ளது.

பொதுவாக அரசியலில் களமிறங்கும் எந்த ஒரு நபரும் வெற்றியடையும் கட்சியின் பக்கமே தங்களை முன்னிறுத்திக்கொள்ள விளைவார். ஆனால் இன்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த கட்சியின் பக்கம் தில்ஷன் இணைந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் 2015ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பிரதமர் தேர்தலின் போது தில்ஷன், ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon