மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

ரஜினியைக் குறைத்து மதிப்பிட முடியாது: திருமாவளவன்

ரஜினியைக் குறைத்து மதிப்பிட முடியாது: திருமாவளவன்

ரஜினி ஒன்றும் விவரம் தெரியாதவர் அல்ல, அவரைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தேசம் காப்போம் மாநாடு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டங்களை நடத்தி வருகிறார் திருமாவளவன். அந்த வகையில் இன்று (நவம்பர் 14) வேலூர் மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டத்துக்காக வேலூர் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், “மாலையில் ஒன்றும் காலையில் ஒன்றும் பேசுகிறாரே ரஜினி?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஏழு பேர் விடுதலை பற்றி ரஜினி ஒன்றும் விவரம் தெரியாதவர் கிடையாது. நாம் ரஜினியை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. செய்தியாளர்கள் தன்னை வேண்டுமென்றே சீண்டுகிறார்கள் என்று புரிந்துகொண்டுதான் அவரும் எடக்குமுடக்காக எதிர்க்கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஊடகவியலாளர்களும் தங்களை ரஜினி சீண்டுகிறார் என்பது தெரிந்துதான் இதை பெரிதுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பிரச்னையில் ரஜினி விளக்கம் கொடுத்துவிட்ட பிறகு அதுபற்றி விவாதிக்க விரும்பவில்லை” என்று கூறினார் திருமாவளவன்.

மேலும், “பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்களில் தலித்துகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதுபற்றி நான் தமிழக முதல்வரை சந்தித்தபோது எடுத்துக் கூறினேன். துணைவேந்தர்கள் நியமன அதிகாரம் ஆளுநரிடமே இருப்பதாக அவர் கூறினார். நான் ஆளுநரிடம் ஊடகங்கள் வாயிலாக வேண்டுகிறேன், லஞ்சமில்லாத வகையில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று விரும்புற நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon