மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

மொத்த விலைப் பணவீக்கம் உயர்வு!

மொத்த விலைப் பணவீக்கம் உயர்வு!

அக்டோபர் மாதத்துக்கான இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் அக்டோபர் மாதத்துக்கான மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் குறித்த விவரங்களை நவம்பர் 14ஆம் தேதி மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் 120.8 புள்ளிகளாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 121.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது 0.7 சதவிகிதம் கூடுதலாகும். மாதாந்திர மொத்த விற்பனை விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திரப் பணவீக்க விகிதம் 5.28 சதவிகிதமாக இருக்கிறது. இது 2017ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 3.68 சதவிகிதமாகவும், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாகவும் இருந்தது.

உணவுப் பொருட்களின் பணவீக்கம் 0.9 சதவிகிதம் உயர்ந்து 145.8 புள்ளிகளாக இருக்கிறது. இதில் கோழிக் கறியின் விலை 4 சதவிகிதமும், உளுத்தம் பருப்பு மற்றும் சோளத்தின் விலை 4 சதவிகிதமும், காய்கறிகள் மற்றும் முட்டை விலை 3 சதவிகிதமும், கோதுமை, மாட்டிறைச்சி, எருமை இறைச்சி, ராகி ஆகியவற்றின் விலை 1 சதவிகிதமும் உயர்ந்திருந்தது. எனினும் வெற்றிலை விலை 3 சதவிகிதமும், தேயிலை, மீன் மற்றும் கடல் உணவுகளின் விலை 2 சதவிகிதமும், நறுமணப் பொருட்கள், பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலை 1 சதவிகிதமும் குறைந்துள்ளது. கனிமங்களின் பணவீக்கம் 4.3 சதவிகிதம் சரிந்து 129.4 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon