மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

பிரதமர் வேட்பாளர்: பாஜக புதியவரை தேடுகிறது!

பிரதமர் வேட்பாளர்: பாஜக புதியவரை தேடுகிறது!

“மோடிக்குப் பதிலாக வேறு யாரையாவது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா என்னும் யோசனையில் பாஜக இருக்கிறது” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை வீழ்த்துவதற்காக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராகுல் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். வரும் தேர்தலிலும் பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தியே பாஜக தேர்தலை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை கிண்டியில் நேற்று (நவம்பர் 14) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “பாஜக கட்சிக்கு உள்ளேயே மோடி பலம் இழந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்தால் சரிவராது, வேறு யாரையாவது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா என்று யோசிக்கக் கூடிய கட்டாயமும், அவசியமும் பாஜகவுக்கு வந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், "திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் இணைந்து செயலாற்றி வருகிறோம். ஸ்டாலினுடனான பிற கட்சித் தலைவர்களின் சந்திப்பு கூட்டணியை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்ட திருநாவுக்கரசர், தேர்தல் நேரத்தில்தான் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமே தவிர, தற்போது யாருக்கு எந்தெந்த இடங்கள், எத்தனை கட்சிகள் கூட்டணிக்கு வருகிறார்கள் என்பதையெல்லாம் கூற முடியாது என்றும் விளக்கினார்.

முன்னதாக சென்னை கத்திபாராவிலுள்ள அமைந்துள்ள முன்னாள் பிரதமர் நேருவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு, திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon