மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

வெளிநாட்டுப் பணம்: தென்னிந்தியா ஆதிக்கம்!

வெளிநாட்டுப் பணம்: தென்னிந்தியா ஆதிக்கம்!

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் சரிபாதியைத் தென்னிந்திய மாநிலங்கள்தான் பெறுகின்றன என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ‘வெளிநாட்டிலிருந்து அதிகப் பணம் அனுப்பப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இந்த ஆண்டும் முன்னிலை வகிக்கிறது. உலக நாடுகள் முழுவதும் குடிபெயர்ந்துள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்தில் சரிபாதி தென்னிந்திய மாநிலங்களுக்குத்தான் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டில் 69 பில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர்.

அதில் 31.74 பில்லியன் டாலர் (ரூ.2,30,900 கோடி) கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய 4 தென் மாநிலங்களுக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மொத்தப் பணத்தில் 46 விழுக்காடாகும். இதில் அதிகபட்சமாக 19 விழுக்காட்டு அளவுப் பணம் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவுக்குக் கடந்த ஆண்டில் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தின் மதிப்பு 13.11 பில்லியன் டாலராகும் (தோராயமாக ரூ.95,000 கோடி).

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தில் சுமார் 82 விழுக்காடு ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, சவுதி அரேபியா, கத்தார், இங்கிலாந்து மற்றும் ஓமன் ஆகிய 7 நாடுகளிலிருந்துதான் அனுப்பப்பட்டுள்ளது. 50 விழுக்காடு பணம் உழைப்பு செறிந்த துறைகளில் பணியாற்றுபவர்களால் அனுப்பப்பட்டுள்ளது. பணம் அனுப்பியவர்களில் 90 விழுக்காட்டினர் வளைகுடா நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பணியாற்றுபவர்களாக இருக்கின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon