மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

மோடிக்கு பாஜகவிற்குள் எதிர்ப்பா? - தமிழிசை பதில்!

மோடிக்கு பாஜகவிற்குள் எதிர்ப்பா? - தமிழிசை பதில்!

பிரதமர் மோடிக்கு பாஜகவிற்குள் எதிர்ப்பு என்பது நடக்காத ஒன்று எனத் தெரிவித்துள்ள தமிழிசை, “குழம்பிய குட்டைக்குள் திருநாவுக்கரசர் மீன்பிடிக்க நினைக்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கிண்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், “பாஜகவுக்கு உள்ளேயே மோடி பலம் இழந்திருக்கிறார். பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதிலாக வேறு யாரையாவது அறிவிக்கலாமா என்று யோசிக்கக் கூடிய கட்டாயமும், அவசியமும் பாஜகவுக்கு வந்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று (நவம்பர் 15) செய்தியாளர்களை சந்தித்தபோது கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “மோடியை விலக்குவதற்கு பாஜகவிற்குள்ளேயே சதி நடக்கிறது என்று திருநாவுக்கரசர் கூறியிருந்தார் என்று செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்த செய்தியே ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லிக்கு பறக்கிறார் என்று வந்திருக்கிறது. காங்கிரஸுக்குள்ளேயே அவரை நீக்குவதற்கான சதிகள் நடந்துவருகின்றன, அது அவருக்குத் தெரியவில்லை. மோடிக்கு பாஜகவிற்குள் எதிர்ப்பு என்பது நடக்காத ஒன்று. மோடியை பாஜகவின் அத்தனை நிர்வாகிகளும், பொதுமக்களும் ஆதரிக்கிறார்கள். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று திருநாவுக்கரசர் நினைக்கிறார்” என்று பதிலளித்தார்.

“திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமோடு இருக்கிறதா என்று மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. இவர்கள் அடுத்த தேர்தல் கூட்டணியில் இருப்பார்களா என்பது மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது” என்று தெரிவித்த தமிழிசை, நாங்கள் வலுவான கூட்டணியை அமைப்போம், நாங்கள் அமைப்பதுதான் பலமான கூட்டணி என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மெகா கூட்டணி தொடர்பாக பேசிய தமிழிசை, “கேரளாவில் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸை எதிர்க்கிறார்கள். மம்தா பானர்ஜி கம்யூனிஸ்டை எதிர்க்கிறார். இவை ஒத்த கருத்தாக எப்படி வர முடியும். ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமையும் என்று ஸ்டாலின் கூறியதிலிருந்தே அந்தக் கூட்டணி நிச்சயம் அமையாது என்று தெரிகிறது. வெவ்வேறு மாநிலங்களில் எதிரெதிர் கூட்டணியில் இருந்துகொண்டு எப்படி கூட்டணி அமைக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon