மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

கஜா புயல் தமிழகத்தை என்ன செய்யும்? - விளக்கும் ‘கோளறிஞர்’

கஜா புயல் தமிழகத்தை என்ன செய்யும்? - விளக்கும் ‘கோளறிஞர்’

ராமச்சந்திரன்

கஜா புயல் ஏற்படுவதை ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்துள்ளார் கோளறிஞர் ராமச்சந்திரன். அது பற்றி மின்னம்பலம்.காமுக்கு பேட்டியளித்தார்.

“2017 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட என்னுடைய ஆண்டுக் கணிப்பில், 2018 நவம்பர் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் நாகப்பட்டினம் அருகே மிகப்பெரிய புயல் கரையைக் கடக்கும் என்று கூறியிருந்தேன். அது போன்றுதான், கடந்த ஒரு வார காலமாக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த புயலினால் காற்றின் பாதிப்பை விட வெள்ளத்தினால் வரும் பாதிப்புதான் அதிகமாக இருக்கும். நாகப்பட்டினம், கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையின் அளவு அதிகமாக இருக்கும். சென்னையில் மிதமான அளவே மழை இருக்கும். வருகிற 17ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும், மீண்டும் 21ஆம் தேதியன்று மழை பெய்யத் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

நான் குறிப்பிட்டுள்ள தேதிகளில் மக்கள் பாதுகாப்புடன் இருந்து கொண்டால் போதும். ஏனெனில், நான் குறிப்பிட்டுள்ள தேதிகளில் நிகழ்வுகள் நடைபெற்று வருவதால், என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும். இது போன்றுதான், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை 2014ஆம் ஆண்டே கூறினேன். நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை பாதிப்பு இருக்கும் என்று நான் கூறியபடி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இதன்மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைத்தாலும், அரசும் மக்களும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஒரு ஆண்டுக்கு முன்பே சொல்லும்போது, தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

ஒரு ஆண்டுக்கு முன்பு கூறும்போது, அரசாங்கம் அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற என்னுடைய ஆதங்கத்தை நேர்காணல் ஒன்றில் கூறினேன். ஆனால், அது போன்று எதுவும் நடக்கவில்லை. 2009ஆம் ஆண்டு பாதிப்பு ஏற்படும் என்பதை, 2008ஆம் ஆண்டே கூறினேன். ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை.

ஆஸ்திரேலியாவில் நான் குறிப்பிட்ட ஆண்டில் வறட்சி ஏற்பட்டது. இப்படிக் காலநிலைகளை முன்கூட்டியே கண்டறியும் பெருமை நான் சார்ந்திருக்கும் விஞ்ஞானத்தையே சேரும். அரசு இதைப் பயன்படுத்துவதால், மக்கள் பயனடைய வேண்டுமென்பதே எனது விருப்பம்” என்கிறார் கோளறிஞர் ராமச்சந்திரன்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon