மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

மெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி புகார்!

மெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி புகார்!

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞர் ராமன் ஷர்மா, அப்படத்தில் வேலை செய்ததற்காக தனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் மெர்சல். எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இராம நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்ப்பில் அவரது மகன் முரளி இப்படத்தைத் தயாரித்திருந்தார். இந்த படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார். அதில் ஒரு கதாபாத்திரம் மேஜிக் நிபுணர்.

மேஜிக் பற்றி விஷயங்களை அறிந்து கொண்டால்தான் இந்தப் பாத்திரத்தில் தத்ரூபமாக நடிக்க முடியும் என்பதற்காக விஜய்க்கு படப்பிடிப்பின் போது மேஜிக் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதற்காக வெளிநாட்டில் இருந்து வந்த மேஜிக் நிபுணர்கள் விஜய்க்கு மேஜிக் கற்றுக்கொடுத்தனர். இந்த படத்திற்காக மொத்தம் மூன்று மேஜிக் நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் மெர்சல் படத்தில் பணியாற்றியதற்கான சம்பள பாக்கி ரூ 4லட்சம் உள்ளதாக கனடாவை சேர்ந்த மேஜிக் கலைஞர் ராமன் சர்மா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ராமன். அதில், “மெர்சல் திரைப்படம் நல்ல படம் தான். படத்தின் இயக்குநர் அட்லி, நடிகர் விஜய் என எல்லோரும் நன்றாக பழகினர். ஆனால் என்ன பயன், மெர்சல் படம் ரிலீசாகி 14 மாதங்களுக்கு மேல் ஆகியும் சம்பளம் கொடுக்கவில்லை” என புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், “இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த முரளிக்கு பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை, தவிர்த்துவிட்டார். எனது உழைப்புக்கான ஊதியத்தை வாங்கப் பல முறை இந்தியா வந்துவிட்டேன். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியபோது, அதற்கு முரளி பதில் அளித்துள்ளார். மேனேஜரிடம் பேசி உங்களது சம்பள பாக்கியைத் தீர்ப்பதாக கூறினார். ஆனாலும் பணம் கைக்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றி கரமாக ஓடி ரூ.200 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்பட்ட நிலையில், படத்தில் பணியாற்றிய ஊழியருக்கு ரூ.4 லட்சம் சம்பள பாக்கி வைத்திருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon