மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

சென்னை மாநகராட்சி ஊழல்: அறப்போர் குற்றச்சாட்டு!

சென்னை மாநகராட்சி ஊழல்: அறப்போர் குற்றச்சாட்டு!

சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள நீர் வடிகால் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூபாய் 740 கோடி மதிப்பிலான டெண்டரில், முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக அறப்போர் இயக்கம், தமிழக அரசு, அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக மின்சார வாரியத்தில் நிலக்கரி போக்குவரத்தில் ரூ 2500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி டெண்டரில் கூட்டு சதி நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த இயக்கம் சார்பில் ஜெயராமன் வெங்கடேசன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் அளித்த புகாரில், சாலை அமைப்பதற்காக போடப்பட்ட ரூ.15 கோடி டெண்டரில். குருமூர்த்தி எண்டர்பிரைசஸ் மற்றும் ஜி.ஜி. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய இரு நிறுவனங்கள் பங்கெடுத்தன. இதில் குருமூர்த்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு டெண்டர் கிடைத்தது.

குருமூர்த்தியின் மனைவியின் பெயர் ஜி.கௌரி அவருடைய நிறுவனம் ஜி.ஜி. இன்ஃப்ராஸ்ட்ரக்சர். அதாவது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு டெண்டரை அவர்களுக்குள்ளாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.

டெண்டரில், ஒரு ஒப்பந்தாரராரும் , மற்றொரு ஒப்பந்ததாராரும் எந்தவிதமான தகவலையும் பகிரக் கூடாது என்பது தான் சட்டம். இருப்பினும், கணவனும் மனைவியும் சேர்ந்து ரூ.15 கோடி மதிப்பிலான டெண்டரை எடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியால் கொடுக்கப்பட்ட, மேலும் மூன்று டெண்டர்களில், முதல் டெண்டரில் சுப்பிரமணி மற்றும் சசி கட்டுமான நிறுவனமும், இரண்டாவது டெண்டரில் சசி கட்டுமான நிறுவனமும், ஆறுமுகம் என்பவரும், மூன்றாவது டெண்டரில் ஆறுமுகமும், சுப்பிரமணிமும் பங்கெடுக்கின்றனர். இதில் முதல் டெண்டரை சுப்ரமணியமும், இரண்டாவது டெண்டரை சசி கட்டுமான நிறுவனமும், மூன்றாவது டெண்டரை ஆறுமுகமும் எடுத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இரண்டிரண்டு பேராக கூட்டு சேர்ந்து மூன்று டெண்டரையும் ஆளுக்கு ஒருவராக எடுத்துள்ளனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுபோன்று வெள்ள நீர் வடிகால் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூபாய் 740 கோடி மதிப்பிலான டெண்டரில் கூட்டு சதி செய்து முறைகேடு நடந்துள்ளது. இந்த மிகப்பெரிய முறைகேட்டில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டிருப்பதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, அந்த டெண்டர்களை ரத்து செய்யுமாறு அறப்போர் இயக்கம் மாநகராட்சி ஆணையரிடம் கோரியுள்ளது.

மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் டெண்டர்களை ரத்து செய்து மக்கள் பணத்தை சேமித்து மக்களுக்கான ஆணையராக இருப்பாரா அல்லது அரசியல்வாதி - அதிகாரி - ஒப்பந்ததாரர் கூட்டுசதியின் பக்கம் நிற்பாரா? என்ற கேள்வியையும் அறப்போர் இயக்கம் எழுப்பியுள்ளது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon