மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 30 மா 2020

புதிய தலைமைச் செயலக வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

புதிய தலைமைச் செயலக வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

புதிய தலைமைச் செயலக விவகாரம் தொடர்பாக ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் நேற்று (நவம்பர் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், “நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கவும், அந்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

“தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், கட்டடம் கட்டியதில் 623.99 கோடி ரூபாய் ஊழல் நடந்தது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட முடியாது” எனவும் வாதிட்டார். “தனி நீதிபதி குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டபோதும், அரசு விசாரணைக்கு மட்டுமே உத்தரவிட்டுள்ளது என்றும் இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 12ஆம் தேதி நடந்த விசாரணையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு முறையாகப் பிறப்பிக்கப்படவில்லை. நீதிபதி ரகுபதி ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை, சட்டசபையில் வைத்து பரிசீலனை செய்து, அதன் பின்னர்தான் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து முடிவு எடுக்க முடியும். ஆனால் அந்த நடைமுறை இந்த வழக்குக்குப் பின்பற்றப்படவில்லை. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தள்ளி வைத்தார்.

வழக்கு பின்னணி

2006 - 11ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து மறைந்த முதல்வர் கலைஞர்,திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon