மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

சர்ச்சையைக் கிளப்ப அழைக்கும் ஆர்.ஜே.பாலாஜி

சர்ச்சையைக் கிளப்ப அழைக்கும் ஆர்.ஜே.பாலாஜி

பண்டிகைகளை முன்னிட்டு படங்களை வெளியிட பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். முன்னணி நாயகர்களின் படங்கள் அந்த நாள்களில் வெளியாகும்போது பரவலான கவனம் பெறும். அதிலும் மற்ற பண்டிகைகளை விட பொங்கலுக்கு அதிக நாள்கள் விடுமுறை வருவதால் அதற்கான போட்டி எப்போதும் அதிகமிருக்கும்.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சிம்பு நடிக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படமும் பொங்கலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டாலும் இந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் எல்.கே.ஜி. அரசியல்வாதி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளது குறித்து ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. அரசியலை விமர்சிக்கும் வகையில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வெளியாகியிருக்கும் போஸ்டர் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

அரசின் மக்கள் நலத் திட்டங்களை விமர்சித்ததற்காக சர்கார் திரைப்படம் பெரும் சர்ச்சைகளைச் சந்தித்தது. சர்ச்சைகளும் போராட்டங்களும் படத்திற்கான விளம்பரமாகவும் அமைந்தது என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. இந்த நிலையில் எல்.கே.ஜி படத்தின் போஸ்டரில் இலவச திட்டங்களை வழங்கும் அரசியல்வாதியாக ஆர்.ஜே.பாலாஜி தோன்றியுள்ளார். இந்த போஸ்டரை தனது ட்விட்டரில் பதிவிட்ட அவர், “விஸ்வாசமான நம்ம பேட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி” எனப் போட்டியிடும் மற்ற இரு படங்களை குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon