மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

மாநிலத்தின் பெயரை யார் தீர்மானிப்பது?

மாநிலத்தின் பெயரை யார் தீர்மானிப்பது?

“மேற்கு வங்கத்தில் பலமே இல்லாத அரசியல் கட்சியான பாஜக, மாநிலத்தின் பெயரை முடிவு செய்ய வேண்டுமா?” என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவதற்கு அம்மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தின் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அதற்குப் பதிலாக பஸ்சிம்பங்கா என்று பெயரை வைக்குமாறும் யோசனை தெரிவித்துள்ளது. பங்களா என்ற பெயர் பங்களா தேஷ் என்ற பெயரைப் போல ஒலிப்பதால், மேற்கு வங்கத்தின் முடிவுக்கு மத்திய வெளியுறவுத் துறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் அலகாபாத், பைசாபாத் உள்ளிட்ட நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவரும் நிலையில், மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றத்தின் மத்திய பாஜக அரசு நிராகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் நேற்று (நவம்பர் 14) கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “தங்களுடைய சொந்த அரசியல் நலனுக்காக, வரலாற்று இடங்கள், அமைப்புகளின் பெயர்களை பாஜகவினர் தன்னிச்சையாக மாற்றி வருவதை சமீப காலங்களாகத் தினந்தோறும் கவனித்து வருகிறேன். நாடு சுதந்திரமடைந்த பிறகு, சில நாடுகள் மற்றும் சில இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரிசா மாநிலத்தின் பெயர் ஒடிஷா என்றும், பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என்று மாற்றம் செய்யப்பட்டது. மேலும் பாம்பே மும்பையாகவும், மெட்ராஸ் சென்னையாகவும், பெங்களூர் பெங்களூரு எனவும் மாற்றப்பட்டுள்ளது. இங்கு மாநில மக்கள் மற்றும் உள்ளூர் மொழிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் மேற்கு வங்கத்தின் கோரிக்கை மீதான மத்திய அரசின் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ள மம்தா,

“மேற்கு வங்கத்தின் பெயர் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பதால், மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘பங்களா’ என்று பெயர் மாற்றம் செய்ய சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆங்கிலத்தில் பெங்கால் என்றும், பெங்காலியில் பங்களா என்றும் இந்தியில் பங்கள் என்றும் குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தோம். எனினும் மூன்று மொழிகளிலும் பங்களா என்றும் இருக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யும்படி உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அதனையும் திருத்தம் செய்து மீண்டும் அனுப்பினோம். ஆனால் அது நீண்ட, மிக நீண்ட காலத்திற்கு கிடப்பில் போடப்பட்டது. இதிலிருந்து மேற்கு வங்க மக்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றும் விமர்சித்துள்ளார்.

“பிரிக்கப்படாத வங்கத்தின் தலைநகரமாக கொல்கத்தா இருந்தது. இந்தியா மற்றும் வங்க தேசத்தின் தேசிய கீதத்தை இயற்றியவர் எங்கள் மண்ணின் மைந்தனான ரவீந்திரநாத் தாகூர். நாங்கள் இந்தியாவைக் காதலிக்கிறோம், அதே நேரத்தில் வங்க தேசத்தையும் காதலிக்கிறோம். பெயர்களின் ஒற்றுமை இரு நாடுகளுக்குமிடையே தடையாக இருக்காது. பஞ்சாப் என்னும் பெயர் நமது அண்டை நாட்டிலும் உள்ளது” என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மம்தா,

மாநிலத்தில் எந்தவோர் ஆதரவும் இல்லாத ஓர் அரசியல் கட்சி, மாநிலத்தின் பெயரை முடிவு செய்ய வேண்டுமா அல்லது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் உட்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மதிக்கப்பட வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க மக்களுக்கு உடனடியாக ஆதரவான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon