விமான எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு ரூ.389.4 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியின் குருகிராம் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து சேவை வழங்கி வரும் நிறுவனம்தான் ஸ்பைஸ்ஜெட். இந்நிறுவனம் தனது ஜூலை - செப்டம்பர் காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ரூ.105.3 கோடி வருவாய் ஈட்டியிருந்த இந்நிறுவனத்துக்கு இந்த ஆண்டில் ரூ.389.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய 13 காலாண்டுகளாக வருவாய் ஈட்டிவந்த ஸ்பைஸ்ஜெட்டுக்கு தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செலவுகள் 25 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. இதில் விமான எரிபொருளின் விலை மட்டும் 48 சதவிகிதம் வரையில் உயர்ந்திருக்கிறது. விமான எரிபொருள் விலையேற்றம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால்தான் இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் காரணம் தெரிவித்துள்ளது. விமான எரிபொருளுக்கு மட்டும் ரூ.272 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு சரிவால் ரூ.78 கோடி கூடுதலாகச் செலவாகியுள்ளது. அந்நியச் செலாவணி பரிவர்த்தனையில் ரூ.46 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.