மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

அமமுக உண்ணாவிரதத்துக்கு அனுமதி!

அமமுக உண்ணாவிரதத்துக்கு அனுமதி!

சென்னை மகாகவி பாரதி நகரில் டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பணியாற்ற முடியாத காரணத்தால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய முடியவில்லை என்று அரசு மீது அமமுகவில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து 18 பேரும் அதிமுக அரசைக் கண்டித்து தங்களது தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, கடந்த வாரம், ஆண்டிப்பட்டியில் அக்கட்சி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தமிழக அரசைக் கண்டித்து சென்னை மகாகவி பாரதி நகரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் 17ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வடசென்னை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் அனுமதி கோரியிருந்தார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர், போராட்டத்துக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்தப் போராட்டத்தில் தினகரன் பங்கேற்கவிருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று (நவம்பர் 14) விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட அந்தப் பகுதியில் 300 பேருக்கும் மேல் கலந்து கொள்ள முடியாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போராட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 300 பேருக்கும் மேல் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம், சட்டம் - ஒழுங்குக்குக் குந்தகம் இல்லாமல் பார்த்துக் கொள்வதாகவும் உத்தரவாதம் அளித்து, மீண்டும் மனு அளிக்கும் பட்சத்தில் போராட்டத்துக்கு அனுமதியளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதுபோல வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஆகிய இடங்களில் அமமுக கட்சியினர் உண்ணாவிரதம் நடத்தவும் அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon