நகை விற்பனை: இரண்டு மடங்கு இலக்கு!


ஒவ்வொரு வருடமும் ஒரு கோடி வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிய இலக்கு நிர்ணயித்து செயல்படவிருப்பதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டைட்டன், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 8.34 சதவிகிதம் கூடுதலான லாபம் ஈட்டியுள்ளது. அதோடு, டைட்டன் நிறுவனத்தின் மொத்த வருவாய் 27 சதவிகித உயர்வுடன் ரூ.4,595.13 கோடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக, ஜீ பிசினஸ் செய்தி நிறுவனத்துக்கு டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பாஸ்கர் பட் அளித்துள்ள பேட்டியில், “அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனையை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற காலாண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒரு கோடி வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிய இலக்கு நிர்ணயத்து செயல்படவுள்ளோம்.
2018ஆம் ஆண்டு முதல் காலாண்டைவிட இரண்டாம் காலாண்டில் எங்களுடைய அனைத்து நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்த வளர்ச்சியில் தனிஸ்க்கின் பங்கு மிக முக்கியமானது. தற்போது சந்தையில் 15 முதல் 20 சதவிகிதம் வரையில் நாங்கள் வளர்ச்சி பெற்றுள்ளோம். இதனால் எங்களுடைய சந்தை மதிப்பும் 29 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. சுபமுகூர்த்த தினம், பண்டிகைகள் குறிப்பாக நவராத்திரி மற்றும் தந்தேராஸ் போன்ற பண்டிகைகளால் நகைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் 28 முதல் 29 சதவிகித வளர்ச்சியை எங்களால் எட்ட முடியும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை பண்டிகைகள் தொடரும் என்பதாலும், தனிஸ்க் நகைக் கடைகள் கஷ்டமான சூழலிலும் சிறப்பாகச் செயல்படுவதாலும் இத்தகைய வளர்ச்சி சாத்தியம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.