மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

ரஃபேல்: விசாரணை முழு விவரம்!

ரஃபேல்: விசாரணை முழு விவரம்!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில், வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா ஆகியோர் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், எனவே அது தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோரும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த திங்களன்று ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்த 14 பக்க அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பித்திருந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு நேற்று (நவம்பர் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான எம்.எல்.சர்மா, மோசடி நடந்துள்ளது என்பது மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மூலம் தெரிவதாகக் குறிப்பிட்டார்.

“35 விமானங்களை வாங்குவதாக அறிவித்து விட்டு பின்னர்தான் மத்திய அரசு பேரத்தில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் பிரமாணப் பத்திரம் மூலம் இதனைத் தெரிந்து கொள்ள முடிகிறது. 2015 ஏப்ரலில் பிரதமர் மோடி இந்த ஒப்பந்தம் குறித்து அறிவிக்கிறார். பின்னரே இது தொடர்பாக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையேயான பேச்சு தொடங்கியுள்ளது.. பிரதமர் மோடி அறிவித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. எந்த ஒப்பந்தமும் இல்லாமல் இத்தனை பெரிய பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் எப்படி அறிவிக்கலாம்” என்று கேள்வி எழுப்பினார்.

மற்றொரு மனுதாரரான வினீத் தண்டாவின் வழக்கறிஞரும் இதே வாதத்தை முன்வைத்தார். பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பே எப்படி இந்த ஒப்பந்தம் நிகழ்ந்தது என்பது குறித்து அட்டர்னி ஜெனரல் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2015 மார்ச் வரை உயிர்ப்புடன் இருந்ததாகவும் பிரதமர் மோடி 2015 ஏப்ரலில் பிரான்சுக்குச் சென்ற பின்னர் ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டது என்று சஞ்சய் சிங்கின் வழக்கறிஞர் வாதிட்டார்.

பிரசாந்த் பூஷண் வாதம்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதாடும்போது, மத்திய அரசு தாக்கல் செய்த விவரங்களில் இருந்து புதிய சிக்கல் வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். “ரஃபேல் விவகாரத்தில் நடைமுறை, விலை, ரிலையன்ஸ் நிறுவனத் தேர்வு ஆகியவை பிரச்சினைக்குள்ளாகி இருக்கின்றன. இந்தப் பிரச்சினையில் இருநாட்டு அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை. இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நாட்டின் தரப்பில் நம்முடைய இறையாண்மைக்கு உத்தரவாதம் இல்லை. புதிய ஒப்பந்தத்தில் முந்தைய அரசின் ஒப்பந்தத்தைவிட 40 சதவிகிதம் அதிகமாக உள்ளது.

விலைப்பட்டியலை வெளியிட முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. 126 ஜெட், 36 ஆக குறைக்கப்பட்டது ஏன்? இந்த ஒப்பந்தத்தை அறிவிக்கப் பிரதமரின் அதிகாரம் என்ன? யார் இந்த முடிவை எடுத்தனர்?” என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

பின்னர், அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், தனது பதிலை கூற முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து அதிகாரிகள் வந்துள்ளதாக வேணுகோபால் கூறியபோது, “ விமானப் படையைச் சேர்ந்தவரே வேண்டும் அமைச்சகத்தைச் சேர்ந்தவர் அல்ல” என்று தலைமை நீதிபதி கூறினார்.

இதற்கு ஒப்புக்கொண்ட வேணுகோபால், மனுதாரர்கள் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கிடையாது என்பதால், அவர்களுக்கு ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலை விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் வாதம் முன் வைத்தார். அப்போது, , ரஃபேல் விலைப்பட்டியல் விவகாரத்தைப் பொதுவெளியில் வெளியிடலாமா என்ற முடிவுக்கு நீதிமன்றம் வரும் வரை, விலைப்பட்டியல் குறித்த விவாதங்கள் இருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்திய விமானப்படை அதிகாரிகளான ஏர் மார்ஷல் மற்றும் ஏர் துணை மார்ஷல் உச்ச நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

மத்திய உணவு இடைவேளைக்குப் பின்னர் நீதிமன்றம் கூடியபோது, ஏர் துணை மார்ஷல் சலபதியிடம் ரஞ்சன் கோகோய் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்திய விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்ட விமானம் எது என்று ரஞ்சன் கோகோய் எழுப்பிய கேள்விக்கு, சுகோய்-30 என சலபதி பதில் அளித்தார். இது 4ஆவது தலைமுறையைச் சேர்ந்த விமானமா என்ற தலைமை நீதிபதி கேள்விக்கு, 3ஆவது தலைமுறை போர் விமானம் என்று சலபதி பதிலளித்தார். மேலும், இந்திய விமானப்படைக்கு 4 மற்றும் 5ஆவது தலைமுறை போர் விமானங்கள் தேவை என்பதால், ரஃபேல் ஒப்பந்தம் அவசியப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

1985 முதல் இதுவரை எந்த புதிய தலைமுறை போர் விமானங்களும் இந்திய விமானப்படையில் இணைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்தெந்த நாடுகள் ரஃபேல் போர் விமானத்தைப் பயன்படுத்துகின்றன என்ற கேள்விக்கு, கத்தார், எகிப்து மற்றும் பிரான்ஸ் என மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

பின்னர் தனது வாதத்தைத் தொடங்கிய அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், “உச்ச நீதிமன்றம் கேட்ட தகவல்கள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விலைப்பட்டியல் நாடாளுமன்றத்தில் முழுமையாக வழங்கப்படவில்லை. புதிய தொழில்நுட்பக் கருவிகள் சேர்த்து உருவாக்கப்பட்டதற்குத் தான் புதிய விலை. ரகசியம் என்பது ஆயுதங்கள் மற்றும் பறக்கும் வானுடவியல் தொழில்நுட்பம் தொடர்பானது. அதனை வெளியிடுவது எதிரிகளுக்குப் பயனளித்துவிடும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. வேண்டுமென்றால் நிபுணர்கள் இந்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்யட்டும். ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை ஆர்டிஐ மூலம் தெரிவிக்க முடியாது” என்று வாதிட்டதோடு, விலை குறித்த தகவலை பிரான்ஸ் அரசின் ஒத்துழைப்புடன் மட்டுமே வெளியிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்திய இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்படாதபோதும் ஆற்றுப்படுத்தும் கடிதம் உள்ளது. விமானங்கள் பற்றாக்குறை காரணமாக நாட்டைப் பாதுகாப்பது கடினமாக உள்ளதாக இந்திய விமானப்படை மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது” என்றும் வேணுகோபால் குறிப்பிட்டார். நேற்றோடு வழக்கில் விசாரணை நிறைவடைந்தது.

சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு மேலாக நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon