மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்!

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்!

லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவை அதிரவைத்த அம்பிடண்ட் நிதி நிறுவன மோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் சையது அகமது பரீத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பரீத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கும் நிதி நிறுவன மோசடியில் பங்கு இருப்பது தெரியவந்தது. அதாவது இந்த விவகாரத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக பரீத்திடம் இருந்து ஜனார்த்தன ரெட்டி, 20.50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக ஜனார்த்தன ரெட்டியை கர்நாடக போலீசார் தேடிவந்த நிலையில், அவர் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வெளியானது. அவரை கைது செய்ய நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஜனார்த்தன ரெட்டி சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய கர்நாடகக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 13ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலடைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஜாமீன் கோரி ஜனார்த்தன ரெட்டி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று (நவம்பர் 14) நீதிபதி ஜெகதீஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ரூ.1 லட்சம் பிணைத் தொகையாக வழங்க உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார்.

ஜாமீன் கிடைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டியின் வழக்கறிஞர் ஆர்.பி.சந்திரசேகர், "ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஏனென்றால் அம்பிடண்ட் நிதி நிறுவன மோசடியில் ரெட்டிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ரெட்டி கைது செய்யப்பட்டார்" என்று கூறினார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon