மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

பாஜகவின் 'பி' டீம் காங்கிரஸ்: பினராயி

பாஜகவின் 'பி' டீம் காங்கிரஸ்: பினராயி

கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டதாக கேரள முதல்வர் பினராயி விமர்சித்துள்ளார்.

இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் 14ஆவது மாநில மாநாடு கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. இதில்,கலந்துகொண்டு பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் 'பி' டீமாக காங்கிரஸ் மாறிவிட்டது. இனவாதத்தை கையாள்வதில் கடந்த கால அனுபவங்களிலிருந்து காங்கிரஸ் கட்சி எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. பலர் அக்கட்சியை விட்டு வெளியேறி வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்த்து வருகின்றனர். சபரிமலை பிரச்சினையில் கட்சிக் கொடியைப் பயன்படுத்தாமல் சங் பரிவார் அமைப்புகளுக்கு ஒத்துழைக்குமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சியின் மாநிலத் தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுதான் அவர்கள் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு.

சபரிமலைத் தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார், ஆனால் அது ராகுலின் தனிப்பட்ட கருத்து என்று சொல்லக்கூடிய அளவுக்கு கேரள காங்கிரஸ் கட்சியினருக்கு துணிச்சல் வந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ், பாஜக, காங்கிரஸ் ஆகியவை முதலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றன. பின்னர் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன" என்று விமர்சித்துள்ளார்.

கேரளாவில் மதச்சார்பற்ற தன்மையை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டிய பினராயி விஜயன், “கேரளாவை மதச்சார்பற்ற முற்போக்கான இடமாக மாற்ற பல சக்திகள் பங்களித்திருக்கின்றன. ஆனால் ஆர்.எஸ்.எஸ் எவ்வித பங்களிப்பையும் அளிக்கவில்லை” என்று விமர்சித்தார்.மேலும் கேரளாவில் வகுப்புவாதப் பிளவை ஏற்படுத்த சங் பரிவார் அமைப்புகள் முயற்சிப்பதாக கூறிய பினராயி, அவர்களுடன் காங்கிரஸும் கரம்கோர்த்துக் கொண்டு செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பகுதியில் சங் பரிவார் அமைப்புகள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டன. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 22ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்குத் தடை விதிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக கேரளா மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon