மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை: கர்நாடகா!

காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை: கர்நாடகா!

கிருஷ்ண ராஜ சாகர் நீர்த்தேக்கம் அருகே 125 அடி உயரத்தில் காவிரித் தாய்க்கு சிலை வைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே உயரமானதாக அமைக்கப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்துவைத்தார். இதுபோலவே உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பிரமாண்ட சிலைகள் அமைக்கப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி ஆற்றுக்கு அர்ப்பணிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ண ராஜ சாகர் நீர்த்தேகத்தின் அருகே காவிரித் தாயின் சிலை அமையவுள்ளது. 400 ஏக்கர் பரப்பளவில், சுமார் 1200 கோடி செலவில் அமையவுள்ள இச்சிலையின் ஆரம்பக் கட்ட பணிகளானது, இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது. அடுத்த இரண்டு வருடங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.

காவிரித் தாய் குடம் வைத்திருப்பது போலவும், அதிலிருந்து எந்நேரமும் தண்ணீர் ஊற்றுவதுபோலவும் சிலை அமையவுள்ளது. மேலும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 360 அடி உயரத்தில் இரண்டு கண்ணாடி கோபுரங்கள் கட்டவும் இதன் வழியாக கிருஷ்ண ராஜ சாகர் அணையின் முழுத் தோற்றத்தை பறவைக் கோணத்தில் பார்வையிடும் வகையில் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இச்சிலை வளாகத்தில் அருங்காட்சியகமும், இசை அரங்கமும், உள்ளரங்கமும் கட்டப்படவுள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் குறிப்பிடுகையில், “இத்திட்டத்திற்காக மாநில அரசு நிலம் வழங்கும். தனியாரின் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கோதாவரி, கிருஷ்ணாவிற்குப் பிறகு தென்னிந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நதியான காவிரி, கர்நாடக மாநிலம் குடகில் உற்பத்தியாகிறது. கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் பெரிதும் நம்பியிருப்பது காவிரி நீரையே. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் பல ஆண்டுகளாக பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்துவருகிறது. இந்த நிலையில் தற்போது காவிரித் தாய்க்கு சிலை அமைப்போம் என்று கர்நாடகம் அறிவித்துள்ளது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon