மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

கஜா: இரவில் கரையைக் கடக்கும்!

கஜா: இரவில் கரையைக் கடக்கும்!

மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் கஜா புயல், இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று இரவு கடலூர், பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி, இந்த புயல் சென்னைக்கும் நாகைக்கும் 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மூன்று துறைமுகங்களிலும் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 25 கி.மீ நீள்வட்ட அளவில் கஜா புயல் நாகையை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கஜா புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்வு ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் டிசம்பர் மாதத்திற்கான பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (நவம்பர் 15) தேர்வு நடைபெறவிருந்தது. கஜா புயல் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை மாணவர்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'STUCOR’ என்ற செயலியை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ரயில்கள் ரத்து

ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் மற்றும் அங்கு போய்ச் சேரும் 8 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 8 ரயில்கள் ராமேஸ்வரத்துக்கு முன்னதாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை - சென்னை, திருச்சி - தஞ்சை சிறப்புக் கட்டண ரயில், வேளாங்கண்ணி - காரைக்கால், காரைக்கால் - தஞ்சை, விழுப்புரம் - மயிலாடுதுறை, காரைக்கால் - சென்னை, சென்னை - மன்னார்குடி, வேளாங்கண்ணி - சென்னை ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண் 56723/56724, 56721/56722 மற்றும் 56725/56726 மதுரை - ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 56829/56830 திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் ரயில் வரும் 15ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகம்

புயல் கரையைக் கடக்கும்போது ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள 30,500 பேர் மீட்புப்பணியில் ஈடுபடத் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கஜா புயலால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றம் என்பது மிக முக்கிய செயல் என்பதால் எச்சரிக்கைத் தகவல்களைத் தெரிவிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்புகள், கடலோர அபாய பேரிடர் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் இரவு கரையைக் கடக்கும்போது, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். கான்கிரீட் வீடுகளில் தங்குவது நல்லது. பலமான காற்று வீசுவதன் காரணமாக மரங்கள், மின் கம்பங்கள், சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், புயல் கடந்த பின்னரும் அதன் தாக்கம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிப்பு

கஜா புயல் கரையைக் கடக்கும்போது நாகை, கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மக்களின் பாதுகாப்பு நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தொலைபேசி எண்கள்

கஜா புயலால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இலவச அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளும் வகையில், தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள 1077, 04142-220700, 221113, 233933, 221383.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள 1077, 04366-226040, 226050, 226080, 226090 ஆகிய எண்களை அம்மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

கஜா புயல் காரணமாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுச்சேரி கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு சுற்றுலாப் பயணிகளை காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கஜா புயலை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon