மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 15 நவ 2018

உயரும் தொழில்நுட்பச் செலவுகள்!

உயரும் தொழில்நுட்பச் செலவுகள்!

நடப்பாண்டில் இந்தியாவில் தொழில் நுட்பச் செலவுகள் 6.7 விழுக்காடு அதிகரிக்கும் என்று கார்ட்னர் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான செலவுகள் 89.2 பில்லியனாக அதிகரிக்கும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.7 விழுக்காடு அதிகமாகும். 2017ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பச் செலவுகளின் வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடாக மட்டுமே இருந்தது.

தொழில் முறையை மாற்றிக்கொள்ளவும், புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும், புதிய முறையிலான பயிற்சிகளை உள்வாங்கிக்கொள்ளவும் டிஜிட்டல் செலவுகள் இந்த ஆண்டில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் கருவிகள் பிரிவில் 7.4 விழுக்காடு வளர்ச்சியுடன் 33.014 பில்லியன் டாலரும், தகவல் தொடர்புச் சேவைகள் பிரிவில் 2.1 விழுக்காடு வளர்ச்சியுடன் 30.585 பில்லியன் டாலரும், தகவல் தொழில்நுட்பச் சேவைகள் பிரிவில் 13.5 விழுக்காடு வளர்ச்சியுடன் 15.706 பில்லியன் டாலரும் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கருவிகள் பிரிவைப் பொறுத்தவரையில் மொபைல் போன்களுக்கான செலவே முதன்மையானதாக உள்ளது.’

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon