மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 25 அக் 2020

‘ஐபிஎல்’லில் மிஸ்ஸிங், ‘எம்எஸ்எல்’லில் சக்ஸஸ்!

‘ஐபிஎல்’லில் மிஸ்ஸிங், ‘எம்எஸ்எல்’லில் சக்ஸஸ்!

தென் ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ள ம்ஸான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இந்திய ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போல தென் ஆப்பிரிக்காவிலும் ம்ஸான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி எனும் பெயரில் உள்ளூர் டி 20 போட்டி நடக்கவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் பல இந்நாள் மற்றும் முன்னாள் முன்னணி வீரர்கள் கலந்துகொள்வதால் இந்தத் தொடருக்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

குறிப்பாக சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஏபி டி வில்லியர்ஸ் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவிருப்பது இந்தத் தொடரிலேயே சிறப்பம்சமாக அமைந்துள்ளது. அதுபோல மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரர் கெயிலும் இதில் விளையாடவுள்ளதால் வான வேடிக்கைக்கு கியாரண்டி எனலாம்.

இந்தப் போட்டித் தொடர் நாளை (நவம்பர் 16) தொடங்கவுள்ள நிலையில் இத்தொடரை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா கைப்பற்றியுள்ளது. 23 ஆண்டுகள், 32 சேனல்கள் 167 நாடுகள் என பிரம்மாண்டமாக தனது நெட்வொர்க்கை கையில் வைத்திருக்கும் இந்நிறுவனம்தான் பல ஐபிஎல் போட்டித் தொடர்களை முன்னதாக வெற்றிகரமாக ஒளிபரப்பி வந்தது. தற்போது ஐபிஎல் உரிமத்தை ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தத் தொடரை சோனி ஒளிபரப்பவிருப்பதால் இத்தொடரை இந்தியாவில் பிரபலப்படுத்த சோனி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி சோனி சிக்ஸ் அல்லது சோனி சிக்ஸ் ஹெச்.டி சேனல்களில் இதைக் காணலாம். ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் காண விளைவோர் SonyLiv.comஇல் காணலாம். மேலும் SonyLiv app வாயிலாகவும் இதைக் காணலாம். பிற்பகல்களிலேயே நடக்கவுள்ள இப்போட்டிகள் 10.30, 7.00 ,5.30, 2.30 ஆகிய நேரங்களில் தொடங்குகிறது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon