மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

ரஃபேல்: மத்திய அரசு பல்டி!

ரஃபேல்: மத்திய அரசு பல்டி!

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதங்கள் நேற்று நடைபெற்றன. மூன்றரை மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு , டசால்ட் நிறுவனம் உள்ளிட்டவை முன்னர் ஒரு தகவல் அளித்த நிலையில், பின்னர் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நேர் எதிரான தகவலையும் அளித்துள்ளன.

• ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளதாக மத்திய அரசு முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களில், ‘இந்திய இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்படாதபோதும் ஆற்றுப்படுத்தும் கடிதம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

• கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்பாகவே பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டது என மத்திய அரசு சார்பில் முதலில் கூறப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணத்திலோ, 2015ஆம் ஆண்டு மே மாதம்தான் பாதுகாப்பு கையகப்படுத்துதல் குழு சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

• 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின்போது, ரஃபேல் விமானம் ஒன்றின் விலை ரூ.670 கோடி என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில். 36 ரஃபேல் விமானங்களின் கொள்முதல் விலை ரூ,60 ஆயிரம் கோடி என்றும் ஒரு விமானத்தின் விலை ரூ.1,600 கோடி என்றும் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

டசால்ட் சி.இ.ஓ.வின் தடுமாற்றம்

• 36 விமானங்களின் விலை, முந்தைய எம்.எம்.ஆர்.சி.ஏ ஒப்பந்தத்தில் கோரப்பட்ட 18 விமானங்களின் விலைக்கு சமமானது என்றும் 9 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்றும் டசால்ட் சி.இ.ஓ. எரிக் அண்மையில் கூறியுள்ளார். ஆனால் அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் இதனை உறுதிப்படுத்தவில்லை.

• ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெ.ஏ.எல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் கிட்டத்தட்ட முழுமையடைந்துவிட்டதாக கடந்த 2015ஆம் ஆண்டு எரிக் கூறியிருந்தார். ஆனால், தற்போது அரசாங்கம் மற்றும் டசால்ட் சி.இ.ஓ. எரிக் தரப்பில், புதிய ஒப்பந்தத்தில் ஹெ.ஏ.எல். நிறுவனத்திற்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

• கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரசு வெளியிட்ட கூட்டு அறிக்கையில் ‘இந்திய விமானப்படையால் சோதனையிடப்பட்ட மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அதே கட்டமைப்போடு மேம்பட்ட நிபந்தனைகளுடனான 36 ரஃபேல் போர் விமானங்கள் தேவை என்றும் இந்திய விமானப்படை செயல்பாட்டுத் தேவைகளுடன் இணங்குவதற்கான காலவரைக்குள் வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டோ, முந்தைய ஒப்பந்தத்தை விட மேம்பட்ட நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுடன் என்பதை சுட்டிக்காட்டிய மத்திய அரசு, வேகமாக விநியோகம் செய்வது குறித்து எதையும் குறிப்பிடவில்லை.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon