மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

ஆவேச ராஜபக்‌ஷே, தாக்கப்பட்ட சபாநாயகர்!

ஆவேச ராஜபக்‌ஷே, தாக்கப்பட்ட சபாநாயகர்!

இலங்கை நாடாளுமன்றத்தில் மோதல்

நான் தான் பிரதமர் என்று ராஜபக்‌ஷே ஆவேசமாகக் கூற, ‘இல்லை, நீங்கள் பிரதமர் இல்லை. உங்கள் மீது இந்த நாடாளுமன்றத்துக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒரு எம்.பி.யாக வேண்டுமானால் பேசலாம்’ என்று சபாநாயகர் கரு. ஜெயசூர்யா சொல்ல இதைத் தொடர்ந்து நடந்த களேபரங்களால் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (நவம்பர் 15) தர்க்கங்களை மீறிய தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின.

நேற்று நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி அடைந்ததை ஒட்டி ராஜபக்‌ஷே பிரதமர் இல்லை என்று சபாநாயகர் அறிவித்தார். இதுபற்றி அதிபர் சிறிசேனாவுக்கும் அவர் கடிதம் எழுதினார். ஆனால் நேற்று நள்ளிரவு, ‘ராஜபக்‌ஷே அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்க முடியாது’ என்று சபாநாயகருக்கு அதிபர் பதில் கடிதம் எழுதினார்.

இதனால் இன்று என்ன நடக்குமோ என்ற பரபரப்போடு இலங்கை நாடாளுமன்றம் கூடியது. காலை10 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வந்த ராஜபக்‌ஷே பிரதமர் இருக்கையில் தானாகவே போய் அமர்ந்தார். இதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் கரு. ஜெயசூரியாவும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் பிரதமர் இருக்கையில் இருந்தபடியே நான் பேச வேண்டும் என்றார். நீங்கள் எம்.பி.என்ற வகையில் வேண்டுமானால் பேசலாம் என்றார் சபாநாயகர்.

அதிபரைக் கொல்ல முயன்றார்கள்

அப்போது பேசிய ராஜபக்‌ஷே, “எம்.பி.யோ, பிரதமரோ, ஜனாதிபதியோ மகிந்த ராஜபக்‌ஷே மகிந்த ராஜபக்‌ஷேதான். பதவி எனக்கு பெரிதல்ல. அதிபரைக் கொல்ல செய்யப்பட்ட சதி ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அந்த அரசைக் கலைத்து என்னைப் பொறுப்பேற்க சொன்னார் அதிபர். நான் இந்த தேசத்தை நேசிப்பதால் அதைக் காப்பாற்ற அந்த பொறுப்பை ஏற்றேன். அந்த அரசு இன்னும் சில காலம் இருந்தால் யு.என்.பி. (ஐக்கிய தேசியக் கட்சி) நாட்டை நாசமாக்கியிருக்கும். பொதுத் தேர்தல் வரை இடைக்கால அரசையே நாங்கள் ஏற்றோம்.

இலங்கை வரலாற்றில் தேர்தலை வேண்டாம் என்று சொன்ன ஒரே சந்தர்ப்பம் இது தான். சபாநாயகர் அரசியலமைப்புக்கு மீறி செயற்பட்டார். பிரதமரை நியமிப்பது அதிபர்தானே தானே? அரசியலமைப்பு மற்றும் அதிகாரம் எங்கே இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் இப்படி நடக்கிறீர்கள் சபாநாயகரே? தீர்ப்பை மக்களிடம் விடுங்கள்... தேர்தலுக்கு செல்ல ஜேவிபி கட்சி தயார் என சொல்கிறது .. யூ என் பி என்ன சொல்கிறது? பொதுத் தேர்தலே உடனடி தேவை.. சபாநாயகர் நீங்கள் சுயாதீனமாக இருக்க வேண்டும்... கட்சி அல்லது மேற்குலக நாடுகளின் நட்பிலிருந்து நீங்கள் நீங்க வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார் ராஜபக்‌ஷே.

ராஜபக்‌ஷே பேசி முடித்ததும் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. லக்‌ஷ்மண் கிரில்லா எழுந்து, “ராஜபக்‌ஷேவின் பேச்சு மீது சபாநாயகர் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்” என்றார். அதை ஏற்று சபாநாயகரும் ராஜபக்‌ஷேவின் உரையின் மீது ஓட்டெடுப்பு நடத்த அழைப்பு விடுத்தார்.

சபாநாயகர் மீது தாக்குதல்

இப்போதுதான் பிரச்னை வெடித்தது. ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகருக்கு எதிராக கடுமையாக முழக்கம் எழுப்பினர். ஒருகட்டத்தில் அவர்கள் சபாநாயர் இருக்கையை நோக்கிச் சென்று சபாநாயகரை நோக்கி தண்ணீர் பாட்டில்களையும், குப்பைக் கூடைகளையும் வீசினர். இதனால் நாடாளுமன்றத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டது. சபாநாயகர் தன் இருக்கையில் இருந்து எழ முடியாத அளவுக்கு ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அப்போது ஒரு எம்பி, ‘அந்த சுருள்தலைமேல தண்ணீர் பாட்டிலை வீசு’ என்று கத்தியதையும் கேட்கமுடிந்ததாக இலங்கை ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராஜபக்‌ஷே ஒரு கட்டத்தில் அவையில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.யான திலும் அமுனுகாமா சபாநாயகரின் இருக்கைக்கு அருகே சென்று ஒரு மேஜை மீது ஏறி சபாநாயகர் மேஜையில் இருந்த மைக்ரோபோனை வேகமாகப் பறிக்க முயன்றார். அப்போது அவர் கை கிழிபட்டு ரத்தம் கொட்டியது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தன் மீது தண்ணீர் பாட்டில்கள், குப்பைக் கூடைகள், காகிதங்கள் வீசப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா அவையில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார். இந்த சம்பவங்களை எல்லாம் ரனில் விக்ரமசிங்கே அவையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எம்பி ஷர்ஷா டி சில்வா இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்த ராஜபக்‌ஷே தன்னை பிரதமர் என்று சொல்லிக் கொள்வது வெட்கக்கேடு. ராஜபக்‌ஷேவின் திட்டப்படிதான் இன்றைய வன்முறை நடந்திருக்கிறது. அவர்கள் சபாநாயகரை தாக்கினர். நாங்கள்தான் சபாநாயகரை உயிரோடு காப்பாற்றினோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தநிலையில் நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இன்று பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகத்தை மீட்டெடுப்போம் என்ற பெயரில் மிகப் பெரும் ஆர்பாட்டத்தையும் மேற்கொள்ள இருக்கிறது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon