மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

குப்பைகள் அகற்றம்: ஆட்சியருக்கு உத்தரவு!

குப்பைகள் அகற்றம்: ஆட்சியருக்கு உத்தரவு!

மின்னம்பலம்

அமராவதி ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள், பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வலர்களுடன் இணைந்து அகற்றுமாறு கரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் பாய்கிறது அமராவதி ஆறு. அமராவதி அணையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பாய்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலூர் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்த 60 கிலோமீட்டர் நீரோட்டத்தின்போது, ஆற்றின் இருபுறமும் கிளைவாய்க்கால்கள் மூலமாக 30,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

அமராவதி ஆற்றின் வழித்தடங்களில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து இருப்பதும், ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டிருப்பதும், கடைமடை வரை தண்ணீர் செல்வதைத் தடுக்கக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கரூரில் அமராவதி ஆற்றின் வழித்தடத்தில் இருக்கும் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியைப் பொதுமக்களும் தன்னார்வலர்களும் மேற்கொண்டனர்.

இவர்களைக் கைது செய்த கரூர் போலீசார், 12 பேர் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாக அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளரிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் நேரில் ஆஜராகி, விரைவில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கும் என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, சீமைக் கருவேல மரங்கள், பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வலர்களுடன் இணைந்து 2 மாதத்தில் அகற்ற வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon