மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

ஜிஎஸ்டியால் மருந்துத் துறை பயன்!

ஜிஎஸ்டியால் மருந்துத் துறை பயன்!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் மருந்துத் துறை சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை ஏற்படுத்தும் நோக்கத்தில் சென்ற ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி மத்திய அரசால் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்திய மருந்துத் துறை சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக மத்திய ரசாயனம் மற்றும் மருந்துத் துறை அமைச்சரான மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பிரதமர் நரேந்திர மோடியின் இலக்குப்படி இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதற்கான பணியில் ரசாயனம் மற்றும் உரத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு மருந்துத் துறையின் வருடாந்திர விற்றுமுதல் ரூ.1,14,231 கோடியாக மட்டுமே இருந்தது. அது தற்போது ரூ.1,31,312 கோடியாக அதிகரித்துள்ளது. இது 6 சதவிகிதம் கூடுதலாகும். ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், 2016-17 நிதியாண்டில் ரூ.2,75,852 கோடி மதிப்புக்கு மருந்துப் பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் 2017-18 நிதியாண்டில் ஏற்றுமதி மதிப்பு 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.3,03,526 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.3,27,700 கோடிக்கு மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon