மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

நமக்குள் ஒருத்தி: வெறும் காட்சிப் பொருள்தானா?

நமக்குள் ஒருத்தி:  வெறும் காட்சிப் பொருள்தானா?

நவீனா

அண்மையில் பல தொலைக்காட்சிகளில் மாடலிங் பெண்களைப் பற்றிய பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த நிகழ்ச்சிகளில் பெயர்களிலேயே கவர்ச்சியும் ஆபாசமும் பெருகி வழிகின்றது. 'கனவுக் கன்னி, சொப்பன சுந்தரி' என்றெல்லாம் பெயரிடப்பட்டுப் பல நிகழ்ச்சிகள் சின்னத்திரையில் ஒளிபரப்பப்படுகின்றன. திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், விளம்பரங்களிலும் பத்திரிகைகளின் அட்டைப் படங்களிலும் பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டினால் மட்டுமே கணிசமான பணம் பார்க்க முடியும் என்பது, முதலாளிகளுக்கு மிகவும் நன்றாகவே புலப்பட்டிருக்கிறது.

ஒரு பெண் எவ்வளவு அறிவானவளாக, திறமையானவளாக, தனித்தன்மைகள் நிறைந்தவளாக, பெரிய உயரங்களைத் தொட்டவளாக இருந்தாலும் சரி, அடிப்படையில் பெண்ணை போகப் பொருளாகச் சித்திரிப்பதிலேயே சமூகம் காலங்காலமாக குறியாக இருந்து வந்திருக்கிறது. இத்தகைய நிகழ்ச்சிகளில் பணத்தை முதலீடு செய்யும் பல தொழிலதிபர்கள் பெண்ணின் கவர்ச்சியை முழுமையாக நம்புகின்றனர். தெருவில் விற்கப்படும் சோப்பு, சீப்பு, கண்ணாடியைப் போல பெண்ணின் உடலும் அவர்களுக்கு விலை பொருள்தான்.

அதிலும் திரைத் துறையில் கோலோச்சிய நடிகைகள் என்றால் அவர்களின் கவர்ச்சிக்குத் தனி மதிப்புதான். ஆனால், இந்தப் பாரம்பரியம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் பாதிக்காமல் இருந்தது அல்லது பெண்களைக் கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதற்கெனத் தனி அலைத்தடங்கள் இருந்துவந்தன என்று சொல்லும் அளவுக்குச் சில அலைத்தடங்களாவது தமது கண்ணியத்தைக் காப்பாற்றிவந்தன. ஆனால், சமீப காலங்களில், அந்த வேறுபாடானது முற்றிலும் உடைபடும் அளவுக்கு முதல் தரமான தொலைக்காட்சி அலைத்தடங்கள்கூட மூன்றாம் தரக் கவர்ச்சியைக் காட்டிப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டன. தொலைக்காட்சி நாகரிகமும் அதன் கண்ணியமும் போன இடம் தெரியவில்லை. இனிவரும் தலைமுறைகள், தொடக்கத்திலிருந்தே பெண்ணை போகப் பொருளாகப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு அச்சாரமிடும் பணியை இன்றைய தொலைக்காட்சிகள் சீரும் சிறப்புமாகச் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

எனினும், தொலைக்காட்சிகளையோ, பத்திரிகைகளையோ மட்டும் குறை கூறுவது ஒருதலைபட்சமானதுதான். பெரும்பாலான ஆண்களின் எதிர்பார்ப்புகளையே அவர்கள் நிகழ்ச்சிகளாகவும், செய்திகளாகவும் மாற்றுகின்றனர். அவர்களின் சபலத்தைப் பணமாக மாற்ற முயற்சி செய்கின்றனர். தனது 'கனவுகளின் விளக்கம்' (Interpretations of Dreams) என்னும் புத்தகத்தில், சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) இதைத்தான் தனது ஆராய்ச்சிகளின் முடிவாக முன் வைத்திருப்பார்.

அவரது முப்பதாண்டு கால ஆராய்ச்சியின் சாராம்சத்தைச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மனித மனம் ஆழ்மனதில் எப்போதும் பாலியல் சார்ந்த விஷயங்களையே சிந்தித்துக்கொண்டிருக்கிறது என்பதேயாகும். அதிலும் ஆணின் உளவியல் உருவாக்க அடிப்படையே பாலுணர்ச்சிகளின் மீது கட்டப்பட்டதுதான். ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்னும் ஹார்மோன் அவர்களை, அவர்கள் முதன்முதலில் பார்க்கும் எந்தவொரு பொருளையும் பாலுணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும்தான் பார்க்க அனுமதிக்கும். அந்தச் சுரப்பியின் தூண்டலின் காரணமாகவே, அவர்களுக்குப் பெண்களின் உடல் மீதான வக்கிர எண்ணங்கள் தலைதூக்குகின்றன. அதைக் கட்டுப்படுத்துவது போல் பலர் பாசாங்கு செய்தாலும் மனதில் தன்னிச்சையாக பாலுணர்வு சார்ந்த அனைத்தையும் அந்தச் சுரப்பி அவர்களைச் சிந்திக்க வைத்துக்கொண்டுதான் இருக்கும்.

அந்த வகை எண்ணங்களிலிருந்து வெளிவர அவர்களுக்குள் மனப் போராட்டம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். சமூகம் கற்பித்த ஒழுக்கமும் ஆழ்மன ஆசைகளும் விடாமல் ஒன்றோடொன்று போரிட்டுக்கொண்டே இருக்கும். அந்த மனப் போராட்டத்தைத்தான் சில ஊடகங்கள் வணிகமயமாக முயல்கின்றன.

பெண்களின் பாதுகாப்பு பற்றி ஒருபுறம் பேசிவரும் அதே வேளையில், தனது போராட்டங்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களைப் பெண்களின் கவர்ச்சியை வைத்துத் தன்பால் இழுக்கும் இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடுகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கும் மனிதர்களின் வக்கிரம் அவர்களோடு நின்றுவிடாமல், தொலைக்காட்சி மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் சென்று சேருகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படங்களுக்கான தணிக்கையை அவசியமாக்கியிருக்கும் அரசாங்கம், பெண் உடலை விலைபொருளாகச் சித்திரிக்கும் நிகழ்ச்சிகளையும், விளம்பரங்களையும் கண்காணிக்க வேண்டிய நிலையும் இருப்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கும் தங்கள் சுயகவுரவத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும். பல ஆண்டுகளாகச் சமூகம் பழக்கப்படுத்திவிட்டது என்கிற காரணத்திற்காக இன்னும் தன்னைக் காட்சிப் பொருளாக மட்டும் காட்டுவதற்கு அவர்களும் அனுமதிக்கக் கூடாது. 'இவ்வாறான நிகழ்ச்சிகளில் பெண்கள் ஏன் நடிக்கிறார்கள்?' என்றும் 'இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் ஆண்கள் ஏன் பார்க்கிறார்கள்?' என்றும் இருபுறமும் தர்க்கம் செய்துகொண்டிருப்பதால் இந்தப் போக்கு நிற்கப்போவதில்லை. இத்தகைய வாதங்களால் சமூகத்தில் இதன் எதிர்மறையான பாதிப்புகள் குறையப் போவதில்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தில் அனைவரும் இருக்கிறோம்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர் நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12

பகுதி 13

பகுதி 14

பகுதி 15

பகுதி 16

பகுதி 17

பகுதி 18

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon