மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 நவ 2018

கஜா: எதிர்பாராத அளவில் சேதம்!

கஜா: எதிர்பாராத அளவில் சேதம்!

கஜா புயலினால் எதிர்பாராத அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இப்புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான கஜா புயல், நள்ளிரவு 12 முதல் இன்று காலை 6 மணி வரை கரையைக் கடந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, புயல் கடந்த இடமான நாகை, வேதாரண்யம் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுத் தனித்தீவாகக் காட்சியளிக்கின்றன. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வீசிய கஜா புயல், திண்டுக்கல்லில் நிலை கொண்டிருந்தது. தற்போது, தமிழக எல்லையைக் கடந்து அரபிக்கடல் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புயல் வலுவிழந்து, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையாக மாறியுள்ளது. இதனால், கேரள மாநிலத்திற்குப் பெருமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் தற்போது கொடைக்கானலுக்கு வடகிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. கேரளாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விரைவில் மாறும். தென்தமிழகம் மற்றும் வட தமிழக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

உயர்ந்த நீர்மட்டம்

கஜா புயலால் சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் ஓரே நாளில் 4 அடி வரை உயர்ந்தது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கழித்து சிறுமணிமுத்தாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. உடுமலை அருகே திருமூர்த்தி மலையிலுள்ள அமணலிங்கேஸ்வர் கோயிலில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அங்கு சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஆச்சலூர், நடுப்படுகை, வலப்பக்குடி, கீழத்திருப்பந்துருத்தி, மேலதிருப்பந்துருத்தி உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவு வாழை பயிரிடப்பட்டிருந்தன. சுமார் 10,000 ஏக்கரில் பயிரிடப்பட்டு பொங்கல் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள், கஜா புயலில் சிக்கிச் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் சேவை

கஜா புயல் மீட்புப் பணிக்காக 450 ஆம்புலன்ஸ்கள் தயார்படுத்தப்பட்டன. 6 மாவட்டங்களிலிருந்து அவசரகால அழைப்புக்காக குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு 800 அழைப்புகள் வந்தன. அதில் 600 அழைப்புகளுக்கு 108 ஆம்புலன்ஸ் அனுப்பியதாகக் கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியில், சுற்றுலா வந்த கார் மீது மரம் சாய்ந்தது. அதிலிருந்த தம்பதிகள் வெளியே வந்துவிட்டனர். அதிலிருக்கும் இரண்டு குழந்தைகளை மீட்கும் பணி நடைபெற்றது.

கஜா புயலினால் வீடுகள், படகுகள் மற்றும் பயிர்ச் சேதம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் 333 மீனவ கிராமங்களில் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சேத மதிப்புகளைக் கணக்கிட அந்த மாவட்டங்களுக்கு வருவாய்த் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

நாகையில் பாதிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை. ஆனால், நாகையின் தெற்குப் பகுதியில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. பைபர் படகுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. கிட்டத்தட்ட 1 லட்சம் மரங்கள் சாய்ந்து விழந்தன. மின் கம்பிகள் அறுபட்டுள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் டவர்களும் சேதமுற்றுள்ளன. தோராயமாக, இப்பகுதியில் 800 வீடுகள் வரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஆனால், இன்னும் முழுமையாகப் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

“அதிகளவில் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் நிறுத்தப்பட்டதால், உயிரிழப்பு ஏற்படவில்லை. இவை அனைத்தையும் சரிசெய்ய எப்படியும் மூன்று நாளாகும். அதனால், அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். அரசாங்கம் அறிவித்தபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நல்லமுறையில் எடுக்கப்பட்டுள்ளன” என்று நம்மிடம் தெரிவித்தார் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கடலோரச் செயல்பாட்டுக் கூட்டமைப்பு அமைப்பாளர் ஏசு ஜீவரத்தினம்.

காரைக்காலில் சேதம்

காரைக்காலில் வீடுகளும், மரங்களும் புயல் காற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. உயிர்ச் சேதம் இல்லை என்றாலும், பொருட் சேதம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ளன. இப்பகுதியை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேரில் வந்து பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

“எங்கள் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி முகாம்களில் மக்கள் தங்குவதற்கு விழிப்புணர்வு அளித்தோம். அவர்களுக்குத் தேவையான வசதிகள் ஓரளவுக்குக் கிடைக்கின்றன. இங்கு இருக்கின்ற பத்து கிராமங்களிலும் மீனவர்கள் மட்டுமே இருப்பதால், இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், புயல் அறிவிக்கப்பட்டதிலிருந்து மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. தற்போது, புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர் மீனவர்கள். அதேசமயத்தில், தேவையான நடவடிக்கைகள் அரசினால் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன” என்று காரைக்கால் மீனவர்கள் பெண்கள் பேரவைத் தலைவி வேதவள்ளி கூறினார்.

24 மணி நேரத்திற்கு பிறகு, தற்போது நாகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வெள்ளி 16 நவ 2018