மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

களமிறங்கத் தயாரான ‘கனா’!

களமிறங்கத் தயாரான ‘கனா’!

தான் தயாரிக்கும் முதல் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான பணிகளைத் தற்போது முடுக்கிவிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

குறைந்த படங்களிலேயே கோலிவுட்டில் ஒரு பிரமாண்ட இடத்தைப் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், திரைத் துறையில் தனது ஒவ்வோர் அடியையும் மிகப் பக்குவமாகவே எடுத்துவைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ள அவர், தனது முதல் படமாக 'கனா' எனும் படத்தைத் தயாரித்து வருகிறார். மகளிர் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் முதல் படம் எனக் கூறப்படும் இதில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துக் கலக்கியிருந்த நடிகர் சத்யராஜ் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பரும், பாடகரும், நடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்குவதன் வாயிலாக கோலிவுட்டில் ஓர் இயக்குநராகவும் தற்போது மாறியுள்ளார்.

இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என முன்னர் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை சென்சாருக்கு அனுப்பிய படக்குழு தற்போது 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. தற்போதைய கோலிவுட் விதிகளின்படி குறிப்பிட்ட படங்களை மட்டுமே ஒரே தேதியில் ரிலீஸ் செய்ய முடியும். அந்த வகையில் பார்த்தால் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் ரஜினியின் 2.O, டிசம்பர் பாதி வரைக்கும் தியேட்டர்களை ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது.

அதன்பின்னர் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவுள்ள படங்களின் எண்ணிக்கையும் தற்போதே பெரிய லிஸ்ட்டாக உள்ளது. எனவே கனா டிசம்பரில் வெளியாகுமா எனும் கேள்வி முன்பு இருந்தது. ஆனால், தற்போது கனா படத்துக்கு சென்சார் சான்றிதழ் வாங்கியுள்ளதால் குறிப்பிட்ட மாதத்தில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்துவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon