மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

சிறப்பு நேர்காணல்: மனிதவள மேம்பாட்டின் முக்கியத்துவம்!

சிறப்பு நேர்காணல்: மனிதவள மேம்பாட்டின் முக்கியத்துவம்!

ஜிப்சன் ஜான், ஜிதீஷ் பி.எம்.

பொருளாதார வல்லுநர் ஜான் திரேஸுடன் நேர்காணல்! (பாகம் – 2)

நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 58 விழுக்காடு, செல்வச்செழிப்பில் உச்சத்தில் இருக்கும் 1 விழுக்காடு பணக்காரர்களிடமே குவிந்துள்ளது என்று ஓர் அறிக்கை கூறுகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. முதலாளித்துவக் கோட்பாடுகளால் இயங்கும் இந்தப் பொருளாதார அமைப்பின் அச்சுறுத்தல்கள் பற்றிய உங்களது கருத்து என்ன?

முதலாளித்துவம் ஒருபுறம் பொருளாதாரச் சமமின்மையை அதிகரிக்கிறது. மறுபுறம் அரசியல், பொருளாதாரம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் அதிகாரம் படைத்தவர்கள் நாட்டின் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதகமாக வடிவமைக்கும் போக்கையே நாம் காண்கிறோம். இந்தியாவின் வரி விதிப்பு முறை, ஏழைகளை வஞ்சிப்பதாகவும், பெரும் செல்வந்தர்களுக்கும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கும் எக்கச்சக்கமாகச் சலுகைகள் அளிப்பதாகவும் இருக்கிறது. அதோடு நில்லாமல், பொதுத் துறை வங்கிகளிலிருந்து பெருமுதலாளிகள் நாட்டு மக்களின் சேமிப்புகளைக் கடனாகப் பெற்றுக்கொண்டு, வாங்கிய கடனைத் திருப்பி அளிக்காமல் தப்பித்துக்கொள்வதற்கு தைரியம், அரசாங்கத்துக்கும் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கமான உறவிலிருந்தே பிறக்கிறது. நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று சொன்னால், ‘அம்பானி சொத்துகளைக் குவித்தால், ஏழைகள் ஏன் கவலைப்பட வேண்டும்?’ போன்ற வாதங்களை முன்வைப்பவர்கள், பணத்தால் உண்டாகும் செல்வாக்கு, அதிகாரக் குவிப்புக்கு வழி வகுத்து, ஜனநாயகத்தைக் குலைத்துவிடும் என்பதை உணர மறுக்கிறார்கள்.

பொருளியல் மேதை அமர்த்தியா சென் அவர்களோடு இணைந்து தாங்கள் எழுதியுள்ள புத்தகங்களில், கேரளா பொருளாதார மேம்பாட்டில் முன்னோடியாகத் திகழும் மாநிலம் என்று பாராட்டியிருக்கிறீர்கள். கேரளாவின் தனித்துவத்திற்கான காரணிகளாகத் தாங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

மனிதவள மேம்பாட்டில் கேரளாவின் சாதனை மகத்தானது. ஆனால், வேலையின்மை, குடிப்பழக்கம் மற்றும் தற்கொலைகள் ஆகியவை அம்மாநிலத்தைப் பெரியளவில் பாதிக்கின்றன என்பது வேதனையளிக்கிறது. கேரளம் மட்டுமல்லாது, ஒவ்வொரு மாநிலமும், மற்ற மாநிலங்களின் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் மற்றும் மிகப்பெரிய குறைபாடுகளிலிருந்து பாடம் கற்பது அவசியம். ஊட்டச்சத்து, வறுமைக் குறைப்பு, சிசு இறப்பு விகிதம், படிப்பறிவு போன்ற குறியீடுகளில் மற்ற மாநிலங்களைவிடக் கேரளா வெகுதூரம் பயணித்திருக்கிறது என்பதையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இமாசலப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற வேறு சில மாநிலங்களும் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் கேரளத்துடன் உள்ள இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றிபெற்றுள்ளன.

கேரளா ஏன் முன்னோடி மாநிலம் என்று நாம் ஆராய்ந்து பார்த்தால், அங்கு குழந்தைப் பருவத்திலிருந்தே கல்வி, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் என மனித ஆற்றலை மையப்படுத்திய வளர்ச்சிப் பாதை மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவரும். அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன்களைத் தந்தது. ஆரம்பக் கல்வி என்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமின்றி, பெண் சுதந்திரம், சமுதாயத்தில் சமத்துவம் என மக்கள் நலனுக்கும் நேரடியாகப் பங்களிக்கிறது. பெண் சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை சந்தை பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிடாமல், மக்கள் ஒன்றிணைந்து போராடி, கூட்டு முயற்சியோடு செயல்பட்டு தங்களது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அம்மாநிலம் மனிதவள மேம்பாட்டில் இத்தகைய நிலையை அடைந்திருப்பதில் பெண்களின் பங்கு மிகப்பெரியது. அவர்களின் பங்களிப்பைப் பற்றி மேலும் ஆய்வுகள் நடத்தி, பெண்களின் முன்னேற்றத்தால் விளையக்கூடிய நன்மைகள் குறித்து ஒரு தெளிவான, முதிர்ச்சியான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும்.

மூலதனம் மற்றும் தொழிற்துறைக்கு வசதியான ஏற்பாடுகளைச் செய்து தருவதில் அனைத்து மாநிலங்களும் குஜராத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது சில பொருளாதார வல்லுநர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால், அம்மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகள் மெச்சக்கூடியதாக இல்லாததற்கான காரணம் என்ன?

தனியார் துறையின் தொழில்முனைப்போடு பொருளாதார வளர்ச்சியடைவது எப்படி என்பதற்கு குஜராத் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று ஜகதீஷ் பகவதி மற்றும் அரவிந்த் பனகரியா போன்ற பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், அம்மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளோ (Human Development Indicators) அல்லது பன்முக வறுமைக் குறியீடுகளோ (Multidimensional Poverty Index) மெச்சிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதே உண்மை. குஜராத்தில் 24 விழுக்காட்டு மக்கள் பன்முக வறுமையில் உழல்பவர்கள். கேரளாவில் இது 1 விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் 7 விழுக்காடாகவும் இருக்கிறது. மனிதவளக் குறியீட்டின் அடிப்படையில் இந்திய மாநிலங்களை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தினால், அந்தத் தரவரிசையில் குஜராத் பத்தாவது இடத்தில் இருக்கிறது. பன்முக வறுமைக் குறியீட்டின் தரவரிசையில் அம்மாநிலம் பெறும் இடம் 12. செயல் வல்லமை மிகுந்த ஆட்சிமுறை, நாட்டின் சராசரியைவிட அதிகமான தனிநபர் வருமானம், மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற சிறப்பம்சங்கள் இருந்தும், மோசமான சமூக மேம்பாட்டுக் குறியீடுகளைக் (social development indicators) கொண்ட மாநிலமாக ஏன் குஜராத் இருக்கிறது என்பதுதான் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி எழுப்பும் சுவாரஸ்யமான புதிர்.

முதலாளித்துவம் பெரும்பான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கவில்லை என்பது திண்ணமாகத் தெரிகிறது. சோசியலிசம்தான் மனிதக்குலத்தை வழிநடத்திச் செல்ல நம்முன்னே இருக்கும் மாற்று ஏற்பாடு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பெரும்பான்மை மக்களின் பொருளாதார நலனை உறுதிசெய்யத் தவறியது என்பதைத் தாண்டி, பல சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சீர்கேடுகளுக்கும் முதலாளித்துவம்தான் பொறுப்பு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அபரிமிதமான சொத்துக்குவிப்பு, உழைக்கும் மக்களைச் சுரண்டும் உற்பத்தி உறவுகள், உலகளாவிய இயற்கைச் சுரண்டல், உலகப் பொருளாதாரத்தை ஊகவணிகச் சந்தையாக மாற்றுவது, ஜனநாயகத்தைப் பலவீனமாக்குவது, சுயநலம் மற்றும் லாப நோக்கை மட்டுமே முன்னிறுத்துவது என முதலாளித்துவத்தின் சீர்கேடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பலருக்கும் பயன்தரும் பொதுப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவது, மக்கள் மத்தியில் ஜனநாயகப் பண்பை வளர்ப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்டுவது, அனைவருக்கும் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை வழங்குவது என நம் வாழ்விற்கு இன்றியமையாத பலவற்றைப் போட்டிப் பொருளாதாரம் உறுதிசெய்ய முடியாது.

முதலாளித்துவம், அரசின் ஆதரவு இல்லாமல் செயல்பட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சோசியலிசத்தை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் கூட தெளிவாக வரையறுக்கவில்லை. பொருளாதாரத்தின் உற்பத்திக் காரணிகளைப் பொதுவுடைமையாக்கினால் மட்டும் சோசியலிசம் மலர்ந்துவிடாது. சோசியலிசம் என்பதை ஒரு நீண்டகால முயற்சியாகவே நான் பார்க்கிறேன். சோசியலிச சமுதாயத்தின் முக்கிய அம்சங்களான நிலச் சீர்திருத்தம், தொழிற்சங்கம், மக்கள்நல அரசு, கூட்டுறவு அமைப்புகள், அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி ஆகியவை உலகின் பல நாடுகளில் உருவெடுத்து, நல்ல முறையில் இயங்கி வருகின்றன. இந்த அம்சங்களைக் கொண்ட திடமான ஒரு மாற்று அமைப்பு நிச்சயமாக எழும். அது, மக்களின் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் இயங்கினாலும், பொது நலன் எனும் பெயரில், தனிநபர் சுதந்திரத்தை காவுகொடுக்காத அமைப்பாக இருக்க வேண்டும். முதலாளித்துவத்திற்கான மாற்றை நாடும் அதே வேளையில், சாதி, மதவெறி, ஆணாதிக்கம், வன்முறை, சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றையும் நாம் துணிந்து எதிர்கொள்ளுவது மிக மிக அவசியம்.

இயந்திரமயமாக்கப்பட்ட இந்த நவீன உலகில், இந்தியா உலக அரங்கில் வல்லரசு நாடாகத் திகழ ஆசைப்படுகிறது. அடுத்தவரை ஏய்த்துப்பிழைக்கும் ஒரு படிக்கட்டு சமுதாயமாக நாம் இருக்கும்போது, உலகின் தவிர்க்கமுடியாத பொருளாதார சக்தியாக உருவெடுக்க வேண்டும் எனும் கனவு நியாயமானதா?

(தொடரும்...)

நன்றி: ஃபிரன்ட்லைன்

தமிழில்: நா. ரகுநாத்

முந்தைய கட்டுரை: பொருளாதார வல்லுநர் ஜான் திரேஸுடன் நேர்காணல்! (பாகம் – 1)

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon