மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 நவ 2018

சிறப்புத் தொடர்: குப்பையிலிருந்து தப்பவே முடியாது!

சிறப்புத் தொடர்: குப்பையிலிருந்து தப்பவே முடியாது!

நரேஷ்

சென்னைக்குச் செய்ய வேண்டியவை - 20

சென்னை மக்கள் இப்படியொரு பழிவாங்கலை நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பல நாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு கேள்விக்கான விடை, இந்தத் தொடருக்கான தேடலில் கிடைத்தது. குப்பைகளைக் கொட்டி நிலத்தைப் பாழ்படுத்துவதால் பல உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றனவே? மனிதர்கள் செய்யும் இந்தத் தவற்றுக்கு நிலமும் நீரும் சிற்றுயிர்களும் ஏன் பலியாக வேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி.

அதற்கான பதில் தெரிந்தபோது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பொதுவாகவே நகராட்சியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் 60 சதவிகிதம் மட்கும் தன்மையுடைய ஆர்கானிக் குப்பைகளாகத்தான் இருக்கும். இவற்றைத் தொடர்ந்து ஒரே பகுதியில் கொட்டும்போது, அவை சிதைந்து அழியும்போது மீத்தேன் வாயுவை வெளியிடும். கிட்டத்தட்ட Fermentation போன்றதொரு செயல்தான்.

நாட்கள் நகர, இந்த மீத்தேன் வாயுவின் அளவானது அதிகரிக்கும். அவை எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பதால், குப்பைகள் எரிய ஆரம்பிக்கும். ஆனால், காற்றில் உள்ள கரியமில வாயு, மீத்தேன் வாயுவைப் பற்றி எரியவிடாது. அதனால், அந்த மீத்தேன் வாயு எரியவும் முடியாமல், அணையவும் முடியாமல் புகைந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு குப்பை மேடும் இதுபோன்று புகைந்துகொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.

வெறும் வைக்கோலையும், விறகுக் கட்டைகளையும் எரிப்பதனாலேயே காற்று கடுமையாக மாசுபடும் எனும்போது, பெரும்பாலும் பிளாஸ்ட்டிக் கழிவுகளைக் கொண்ட குப்பை மேடுகளில் இருந்து பிளாஸ்ட்டிக், ரப்பர் கழிவுகள் எரிந்து வெளிவரும் புகையானது எவ்வளவு மாசுவை ஏற்படுத்தும் என்று எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

அதுவும், இந்த குப்பைக் கூளங்களிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையானது, கண்களுக்குப் புலப்படாத படிவத்தைக் கொண்டது. இதன் பாதிப்புகளே எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்படாத நிலையில், புதிய கண்டுபிடிப்பு ஒன்று குலைநடுங்கும் செய்தியைத் தெரிவித்துள்ளது.

இந்தக் குப்பைகள் ஒரே இடத்தில் நிறைக்கப்படும்போது வெளியாகும் 'டையாக்சின்' (Dioxin) எனும் நச்சுக் காற்று, தன் மூலக்கூறுகளைப் பல ஆயிரம் கிலோமீட்டருக்கு பரப்பும் தன்மையுடையது. இந்த 'டையாக்சின்' என்பது பெரும்பான்மையாக வெளியிடப்படும் நச்சுப்புகை. இதைத் தவிர சிறிய அளவில் பல்வேறு அமில வாயுக்களும் குப்பைக் கூளங்களிலிருந்து வெளிப்படுகின்றன.

தற்போது சென்னையில் குறைந்த அளவான 10 இடங்களில் இதுபோன்ற குப்பைக் கூளங்கள் உள்ளன. அப்படியென்றால், சென்னை மாநகராட்சி முழுவதும் இந்த நச்சுக் காற்றின் பரவல் இருக்கும் என்பது நிதர்சனம். அதாவது, சென்னையில் மட்டுமல்லாமல், குப்பைக் கூளங்களால் நிறைக்கப்பட்ட பெரு நகரக் குடியிருப்புகளில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் இந்த நச்சுக் காற்றை சுவாசிக்கிறார் என்று அர்த்தம்.

இந்த டையாக்சின் எனும் நச்சுப் புகையால் இந்நகர மக்களுக்கு அப்படியென்ன பாதிப்பு ஏற்படும் என்று சாதாரணமாகத் தேடுபொறியைத் தட்டியபோது கிடைத்த தகவல் உங்கள் பார்வைக்கு:

"டையாக்சின் வாயுவானது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த வாயுவைச் சுவாசிப்பதனால் இனப்பெருக்கப் பிரச்சினைகள் ஏற்படுத்துவதுடன் உடலின் நோய் எதிர்ப்புத் திறனையும் சேதப்படுத்தும். ஹார்மோன் செயல்பாடுகளை பாதிப்பதோடு புற்றுநோயையும் உண்டாக்கும்."

இது மிகவும் சுருக்கமான விளக்கம். மேலும் அதிக விளக்கங்களைப் படித்தால் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவற்றை எழுதி உங்களைப் பதறவைப்பது நோக்கமல்ல. என் வீட்டில் குப்பைகள் இருக்கக் கூடாது என்றும் வீட்டிலிருந்து வெளியேற்றும் குப்பைகள் எங்கு சென்றாலும் எனக்குக் கவலையில்லை என்றும் வாழும் மக்களை எச்சரிக்கை செய்வதே நோக்கம்.

எப்படிக் கடலில் எறியும் பிளாஸ்ட்டிக் குப்பைகள் உப்பாகவும் கடல் உணவாகவும் திரும்ப நம் தட்டிற்கே வருகின்றனவோ, அதேபோல, வீட்டிலிருந்து வெளியேறும் எந்தவொரு குப்பையும் ஏதோ ஒரு வகையில் திரும்ப நம் நுகர்வுக்குத்தான் வந்து சேரும். எனவே, நம் தவறுகளைச் சரிசெய்ய வேண்டிய கடமை நமக்குத்தான் இருக்கிறது.

இன்னொரு முக்கியமான அரசாங்கத் தரவு ஒன்றையும் குறிப்பிட்ட விரும்புகிறேன். குப்பை கூளங்கள் இருக்கும் இடங்களில் இருந்து விலகி இருந்தால் தப்பித்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. தமிழ்நாடு முழுக்க மக்களால் கொட்டப்படும் குப்பைகளில் 80 சதவிகிதம் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளால் அள்ள முடிகிறது என்கிறது நகராட்சிகளின் துப்புரவுத் தரவுகள். கிட்டத்தட்ட 20 சதவிகிதக் குப்பைகள் சாலைகளிலும் தெருவோரங்களிலும் கழிவுநீர்க் கால்வாய்களிலும்தான் கொட்டப்படுகின்றன. இவை அந்தத் தெருவுக்கான நச்சுக் காற்றை வெளியிடுகிறது. பெருநகர கட்டடங்களின் வாசலிலேயே வழிந்து ஓடும் கழிவு நீர் கால்வாய்களில் இருக்கும் 'Carbon content'களும் நிச்சயமாக மீத்தேன் வாயுவை வெளியிடும் என்பதை நிரூபிக்க காற்று மானிகள் கிடைக்கின்றன.

இந்த நச்சுப் புகையைச் சுவாசித்ததனால்தான் உடலுக்கு இந்த நோய்கள் வந்தது என்பதைக் கண்டறிவது மிகக் கடினம். எப்படி கண்ணுக்குத் தெரியாமல் குப்பைகள் இயற்கையைச் சீரழிக்கின்றனவோ, அதே வகையில் குப்பைகளால் மனிதர்களுக்குக் கண்ணுக்குத் தெரியாத சீரழிவுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டிய காலம் இது!

(தீர்வை நோக்கிய தேடல் தொடரும்..)

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 16 நவ 2018