மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

சிலைக் கடத்தல் புகார்: டிஎஸ்பி கைது!

சிலைக் கடத்தல் புகார்: டிஎஸ்பி கைது!

திருநெல்வேலி நாறும்பூநாதர் கோயில் சிலைகள் திருடப்பட்ட வழக்கில், திருச்சி மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோயிலில் இருந்து, 2005ஆம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர் மீது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட சுப்பிரமணியர், சிவகாமி அம்பாள், வெயிலு கந்தம்மன், பிரியமுடையாள் உட்பட 13 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 10 பேர், ஏற்கெனவே வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பரமதேவன்பட்டியைச் சேர்ந்த பரமதுரை (42) என்பவரை, இவ்வழக்கு தொடர்பாகக் கடந்த 13 ஆண்டுகளாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இதன் பின்னர், நாறும்பூநாதர் கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர், சிவகாமி அம்பாள் உள்ளிட்ட 9 சிலைகள் மீட்கப்பட்டன. திருடப்பட்ட 13 சிலைகளில், மீட்கப்பட்ட 9 சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்.

இந்தச் சிலைகளில், நடராஜர் சிலையின் கை துண்டாக்கப்பட்டு ஒட்டப்பட்டது கண்டறியப்பட்டது. கடந்த அக்டோபர் 20ஆம் தேதியன்று, இவை அசல் சிலைகள் தானா என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் தொல்லியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, “நடராஜர் சிலையின் கை துண்டிக்கப்பட்டு, அதன்பின் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், அந்தச் சிலையில் உலோக வேற்றுமை உள்ளது. சர்வதேசத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இது நடைபெற்றுள்ளது" என்று தெரிவித்தார் ஐஜி பொன்மாணிக்கவேல்.

இது தொடர்பாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் டிஎஸ்பி காத்திஃப், காதர் பாட்ஷா, காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோரும் சிலைக் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். டிஎஸ்பி காத்திஃப் ஓய்வுபெற்று விட்டார். டிஎஸ்பி காதர் பாஷா சிலைக் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.

சிலைக் கடத்தல் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு, சென்னை மாதவரத்தில் மாநகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ஜீவானந்தம். இவர் பதவி உயர்வு பெற்று திருச்சி மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்,சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிஎஸ்பி ஜீவானந்தத்துக்கு சம்மன் அனுப்பினர். நேற்று விசாரணையில் ஆஜரான டிஎஸ்பி ஜீவானந்தத்தைக் கைது செய்வதாக அறிவித்தனர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon