மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 11 டிச 2019

வங்கதேசத்தில் பத்திரிகையாளர் விடுதலை!

வங்கதேசத்தில் பத்திரிகையாளர் விடுதலை!

முகநூலில் வங்கதேச அரசை விமர்சித்ததற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஷைகிதுல் அலாம் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதாக அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் நேற்று (நவம்பர் 15) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாட்டிலிருந்து வெளிவரும் டாக்கா ட்ரிபூன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறுகையில், வங்கதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சேக் அப்துல் அவால் மற்றும் பீஷ்மாதேவ் சக்கரவா்த்தி நேற்று ஷைகிதுல் அலாமுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று முகநூலில் வங்கதேச அரசை விமர்சித்ததற்காக அலாம் அவரது வீட்டிலிருந்து சிவில் உடையணிந்த போலீசாரால் எந்த பிடி ஆணையுமின்றி கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அலாமின் கைதைக் கண்டித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.

இந்தியாவின் பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய், மனித உரிமை அமைப்புகள் பியூசிஎல், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்றவை கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. இந்த நிலையில், 100 நாட்களாகச் சிறையில் அடைக்கப்பட்ட அவரை நேற்று ஜாமீனில் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

வங்கதேச அரசு முகநூலில் அரசை விமர்சித்தால் எந்த விசாரணையுமின்றி கைது செய்யலாம் என்ற ஒடுக்குமுறை சட்டத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon