மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 16 டிச 2019

குட்கா குற்றப்பத்திரிகை: அமைச்சர் பெயர் மிஸ்ஸிங்!

குட்கா குற்றப்பத்திரிகை:  அமைச்சர் பெயர் மிஸ்ஸிங்!

குட்கா ஊழல் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்படும் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும், சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்துள்ள நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ சார்பில் நேற்று (நவம்பர் 15) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் இந்தக் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், கூடுதல் குற்றப்பத்திரிகை பின்னர் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட ஆறு பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் இடம் பெறவில்லை.

அதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் உயரதிகாரிகளுக்கும் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருவதால், அடுத்தகட்டமாக இந்த வழக்கில் பலர் கைது செய்யப்படக்கூடும் என்ற சூழலும் எழுந்துள்ளது. ஒருவேளை அவ்வாறு கைது செய்யப்பட்டால் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கலின்போது அவர்கள் பெயர்கள் இடம்பெற சிபிஐ போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon