மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: இந்த சமுத்திரங்கள் விற்பனைக்கு!

சிறப்புக் கட்டுரை: இந்த சமுத்திரங்கள் விற்பனைக்கு!

சேது ராமலிங்கம்

மனிதகுலம் அனைத்துக்கும் பொதுவாக இருக்கும் இயற்கை வளங்களைத் தனியார்மயமாக்கினால் என்ன விபரீதம் நடக்கும்? ஒரு நாவலிலிருந்தே தொடங்குவோம். ஆங்கில நாவலாசிரியர் டான் பிரௌன் எழுதிய ‘டிசப்ஷன் பாயின்ட்’ என்ற நாவல் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தைக் கைப்பற்றுவதற்குச் சில தனியார் கம்பெனிகள் சதியில் ஈடுபடுவதை மையக்கருத்தாகக் கொண்டு அது எழுதப்பட்டிருக்கும்.

விண்வெளியில் பிணங்களை மிதக்க விடுவது

அந்த நாவலில் ஓர் இடத்தில் விண்வெளி விஞ்ஞானிகளிடையே கடுமையான விவாதங்கள் நடைபெறும். மொத்த விண்வெளியையும் சாட்டிலைட்டுகளை நிறுத்துவதன் மூலம் தனியார்மயமாக்கலாம் என்றபடி விவாதங்கள் செல்லும். அப்போது ஒரு விஞ்ஞானி கூறுகையில், பூமியில் பிணங்களைப் புதைப்பதற்கு இனியும் இடமில்லை. ஆனால், பிரமாண்டமான விண்வெளியில் ஏராளமான இடமுள்ளது. எனவே பிணங்களை அப்படியே விண்வெளியில் மிதக்க விட்டுவிடுவோம் என்ற ஆலோசனையை முன்வைப்பார். இதைக் கடுமையாக மறுத்து இன்னொரு விஞ்ஞானி அது பைத்தியக்காரத்தனமான ஆலோசனை, விண்வெளியில் மிதக்கும் பிணங்கள் அழுக ஆரம்பித்தாலோ அவை விண்வெளிக் கற்கள் அல்லது சாட்டிலைட்கள் மீது மோதினால் என்ன ஆகும்? அதிலுள்ள கிருமிகள் எல்லா இடங்களிலும் பரவுமே என்று ஆவேசமாக வாதிட்டு அந்த ஆலோசனையைக் கைவிடுமாறு செய்வார். இதுதான் தனியார்மயமாக்கத்தின் உச்சபட்ச வெளிப்பாடு.

எதையுமே சரக்காக்கி (commodify) விடுவது மூலதனத்தின் பண்பாகும். தற்போது நீலப் பொருளாதாரத்தில் சமுத்திரமே சரக்காக்கப்பட்டு அது தனித்தனியே பிரித்து உலகிலுள்ள கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுக்கப்பட உள்ளது.

மூலதனத்தின் இயல்பு

சமுத்திரங்களை விற்பனைக்கான சரக்காக மாற்றினால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்துகொள்ளும் முன்பாக மூலதனத்தின் இயல்பு குறித்து எளிமையாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

பொதுவாக ஒரு தொழிலில் முதலீடு செய்வது, அதிலிருந்து லாபம் ஈட்டுவது, பின்னர் அந்த லாபத்தை மறுமுதலீடு செய்வது, லாபம் பெறுவது எனச் சுழற்சியாக நடக்கிறது. முதலீடு - லாபம் - மறுமுதலீடு - லாபம் என முடிவுறவாத சுழற்சி நடைபெறுகிறது. இந்தச் சுழற்சியில் தொன்ம எரிபொருட்களான நிலக்கரி, எரிவாயு பெட்ரோல் போன்றவையும் நிலம், நீர், உள்ளிட்ட இயற்கை வளங்களும் முதலீடாகப் போடப்படும்போது அவற்றை மீண்டும் மறு முதலீடாகப் போட முடியாத நிலை உருவாகிறது. அதாவது பணம் என்ற முதலீடு போன்று அது மறுபடியும் தன்னை லாபமாக்கி மறு முதலீடாக மாற்றுவதில்லை. இயற்கை வளங்கள் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியும் அல்ல. எனவே இந்தச் சுழற்சி என்றேனும் ஒருநாள் முடிவுக்கு வந்து இயற்கை வளங்கள் முழுக்கச் சுரண்டப்பட்டு வறண்ட நிலை ஏற்படும்.

இரண்டாவது, பணத்தைப் போன்று இயற்கை வளங்கள் கணக்கிடப்படுவதில்லை அல்லது மதிப்பிடப்படுவதில்லை. அது இலவசமாகக் கிடைப்பதாகவே கருதுகிறது முதலாளியம். அதாவது சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படாத நீர், காற்று உள்ளிட்ட எந்த வளத்தையும் அது ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. அதனால் இலவசமாக எடுத்து முதலீடாகப் பயன்படுத்துகிறது. இயற்கை ஒரு மூலதனமாகக் கையாளப்படும்போது இயற்கை மறுபடியும் கிடைக்கக்கூடிய வற்றாத வளமாக இல்லாத காரணத்தால் அது இயற்கையின் அழிவுக்கு இட்டுச் செல்கிறது. அதாவது மூலதனமே இயற்கையை அழிக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் மூலதனமானது இந்தப் புவியின் மீது கண்ணுக்குத் தெரியாத மறைமுகமான யுத்தத்தை நடத்துகிறது. அது நிலத்தையோ, கடலையோ, அதன் சத்தையும் வளத்தையும் சுரண்டும்போது மீண்டும் சுரண்டப்பட்ட அந்த வளத்தையும் சத்தையும் மீண்டும் நிலத்திலோ, கடலிலோ கொண்டுசேர்ப்பதில்லை என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. இதனால் மனிதகுலத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான ரத்தமும் சதையுமான உறவை அறுத்துப் பிரிக்கிறது.

செத்தது உயிரோடு இருப்பதை உறிஞ்சுகிறது

இன்னொரு வகையில் ஏற்கனவே இயற்கையை உறிஞ்சி திரட்டப்பட்ட மூலதனமானது மறுபடியும் உயிரோடு இருக்கிற இயற்கை என்ற மூலதனத்தை உறிஞ்சுகிறது. செத்த மூலதனம் உயிரோடு இருக்கிற மூலதனத்தை உறிஞ்சுகிறது. தொகுப்பாகக் கூறினால், தற்போதைய மூலதனத்தின் இயக்கமானது இயற்கையுடன் கடுமையாக முரண்பட்டு நிற்கிறது. இயற்கையை அழிப்பதைத் தனது இயல்பிலேயே கொண்டுள்ளது.

மூலதனத்தின் சில இயல்புகளையும் அது இயற்கையுடன் கொண்டுள்ள பகை முரண்பாடுகளையும் பார்த்த நாம், தற்போது இயற்கை வளங்களிலேயே மிகப்பெரிய வளமான சமுத்திரம் குறித்துத் தெரிந்துகொள்வோம். பொதுவாகவே பெரும்பாலான மக்கள் - படித்தவர்கள் உட்பட - கடல் அல்லது சமுத்திரம் என்றால் மீன் என்பதோடு மட்டுமே தொடர்புபடுத்திப் புரிந்துகொள்வார்கள். ஆனால், கடல் என்ற பிரமாண்டமான சூழல் அமைப்பு மனிதகுலத்துக்கு அடிப்படை ஆதாரமானதாகும். உலகின் நிலையானதும் சமநிலையினமானதுமான தட்பவெப்ப நிலையைப் பராமரிப்பது கடல் என்ற மாபெரும் சூழல் எந்திரமே.

மாபெரும் சூழல் அமைப்பு

பூமியின் 70 விழுக்காடு பரப்பில் உள்ள கடல்களிலும் பெருங்கடல்களிலும் உள்ள நீரோட்டங்களின் (water currents) மூலம் கடலில் உள்ள சத்துகள் பரவலாக எடுத்துச் செல்லப்படுவதுடன் புவியில் அதிக குளிர்ச்சி அல்லது அதிக வெப்பம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

சமுத்திரங்களே 50 விழுக்காடு மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அதே போல மிகப்பெரிய பணியான புவி சூடாவதைத் தடுக்கும் வகையில் 50 விழுக்காட்டுக்கும் மேலான கரியமில வாயுவை ஈர்த்துக்கொள்கின்றன. இதனால் சமுத்திரங்களுக்கும் கடல்களுக்கும் கார்பன் சின்க் என்ற பெயரும் உண்டு.

கடல்களின் அருகிலுள்ள அலையாத்திக் காடுகள், கடல் புற்கள் மற்றும் உவர் சதுப்பு நிலங்கள் ஆகியன வாயு மண்டலத்திலிருந்து (வனங்களை விட) 70 மடங்கு கரியமில வாயுவை ஈர்த்துக்கொள்கின்றன. அத்துடன் வனங்களைவிட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு வரை கரியமில வாயுவைச் சேமித்துக்கொள்கின்றன. இதனால் காலநிலை மாற்றத்தின் பாதிப்பைப் பெருமளவில் குறைக்கின்றன. அலைகளிலிருந்து வெளிவரும் சக்தியையும் பவளப் பாறைகள் 97 விழுக்காடு குறைக்கின்றன. அலையாத்திக் காடுகள் 66 விழுக்காடு உயரமான அலைகளைத் தடுக்கின்றன.

பக்க விளைவில்லாத புரதச்சத்து

இவற்றுக்கெல்லாம் மேலாக உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு 15 விழுக்காடு புரதச்சத்து மீன்களிலிருந்துதான் கிடைக்கிறது. மீனிலிருந்து கிடைக்கும் புரதச்சத்தானது எந்த விதமான பக்கவிளைவுகளும் இல்லாதது. 40 விழுக்காடு மீன் பிடிப்பின் மூலமாக 35 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. 80 விழுக்காடு இறால் பிடிப்பின் மூலமாக 100 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. நாட்டின் சராசரி உற்பத்திக்கு 28 விழுக்காடு கடல்களே பங்களிக்கிறது. உலக வர்த்தகத்தின் 90 விழுக்காடு கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது. எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகளின் மூலமாக 34 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மூலமாக 200 பில்லியன் டாலர்கள் கிடைக்கின்றன. அல்சமைர் நோய், புற்றுநோய், ஆர்த்தெரிட்டிஸ் மற்றும் இதயநோய்களுக்கான மருந்துகள் கடல் வாழ் தாவர உயிரினங்களிலிருந்து கிடைக்கின்றன.

சமுத்திரத்தை பிளாட் போடுவது

இது போன்ற பிரமாண்டமான பணிகளைச் செய்து மனிதகுலத்தை வாழவைக்கும் கடல்களையும் சமுத்திரங்களையும் முழுமையாகத் தனியாருக்குத் திறந்துவிடும் திட்டம்தான் நீலப் பொருளாதாரம். இதுதான் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. நீலப் பொருளாதாரத்தின் மூலமாகக் கடல் மீன் வளங்கள், இறால் பிடிப்பு, கடற்கரைச் சுற்றுலா, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், கடல் தரையில் சுரங்கங்கள் தோண்டுதல், கடல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் (துறைமுகம் சார்ந்த வளர்ச்சித் தி்ட்டங்கள்), கடற்கரை சார்ந்த புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திட்டங்கள், கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள் (கடற்கரை நகரங்களை உருவாக்குதல்), கடல் சார்ந்த எண்ணெய்க் கிணறுகள், எரிவாயுக் கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டுதல் ஆகிய அனைத்தையும் தனித்தனியே பிரிக்கப்பட்டு அதாவது ரியல் எஸ்டேட் போன்று பிளாட் போன்று பிரிக்கப்பட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்பட உள்ளன. இவை அனைத்தையும் கடல் சட்டத்தின்படி ஐநாவின் அனுமதியோடு மேற்கொள்ளப்பட உள்ளன. இவற்றில் கடல் தரையில் சுரங்கங்கள் தோண்டிக் கனிம வளங்கள் எடுக்க அனுமதிக்கப்படும் சர்வதேச உடன்பாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகள் கையெழுத்தி்ட்டு அந்தப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவும் இதில் கையெழுத்திட்டுள்ளது.

லாப வெறிக்காக சமுத்திரங்களையே விற்பனைச் சரக்காக மாற்றி மனிதகுலத்துக்கே பேரழிவை உண்டாக்கும் திட்டங்கள் எதிர்காலத்தையே அச்சுறுத்துவதாக மாறியுள்ளன.

துணை நின்றவை:

1.Making War on the Planet ,Geo Engineering and Capitalism”s Creative Destruction of the Earth,by John Bellamy Foster, Monthly Review, sep,2018.

2.The Paradox of Wealth: Capitalism and Ecological Destruction , by John Bellamy Foster, Monthly Review, Nov, 2009

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon