மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

மிசோரம்: தேர்தல் அதிகாரி மாற்றம்!

மிசோரம்: தேர்தல் அதிகாரி மாற்றம்!

மிசோரம் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணியைக் கவனித்து வந்த தலைமை தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.

40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மிசோரமில் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் தலைமை அதிகாரி எஸ்.பி.சஷாங்க் தேர்தல் நடைமுறையில் கொண்டுவந்த மாற்றம் மக்களின் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியது. மேலும் அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் லால்நன்மியா சாகுங்கோ தேர்தல் விவகாரங்களில் தலையிடுவதாக சஷாங்க் புகார் தெரிவித்ததையடுத்து, சாகுங்கோவைப் பதவி நீக்கம் செய்ய மாநில அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக் கோரி, பல்வேறு சமூக அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து, எஸ்.பி.சஷாங் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்ததால், அவரை மாற்றி புதிய தேர்தல் அதிகாரியை நியமிக்க வலியுறுத்தி அம்மாநில முதல்வர் லால் தன்ஹவாலா பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். “தேர்தலை நல்லபடியாக நடத்துவதற்குத் தலைமை தேர்தல் அதிகாரியை நீக்குவதுதான் ஒரே வழி” என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றி இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிசோரம் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டு வந்த எஸ்.பி.சஷாங்க் நவம்பர் 15 முதல் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய அதிகாரியாக ஆஷிஷ் குந்த்ரா ஐஏஎஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon