மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

சிறப்புப் பார்வை: டாஸ்மாக்கைப் பின்னுக்குத் தள்ளும் சாராயக் கடைகள்

சிறப்புப் பார்வை: டாஸ்மாக்கைப் பின்னுக்குத் தள்ளும் சாராயக் கடைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்குப் போட்டியாகச் சாராயக் கடைகளும், புதுச்சேரி மது பாட்டில் விற்பனையும் நடைபெறுவதாகவும், அதனால் டாஸ்மாக் வருமானம் பெருமளவில் குறைந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

டாஸ்மாக் மது விற்பனையானது, கடந்த தீபாவளி சீசனின்போது தமிழகமெங்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாக இருந்ததாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் மது விற்பனை அதிகமாக இருந்துவரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதற்கு நேரெதிரான நிலை உள்ளது. டாஸ்மாக் அலுவலக வளாகத்திலேயே இது குறித்த புகார் எழுப்பப்பட்டுள்ளது. “எவ்வளவு முயற்சி செய்தாலும், விழுப்புரத்தில் மட்டும் சாராயத்தை ஒழிக்க முடியவில்லை” என்கின்றனர் இம்மாவட்ட போலீசார். இதனால், டாஸ்மாக் கடைகளுக்குச் செல்வதைவிட, இம்மாதிரியான கடைகளை அதிகளவில் நாடுகின்றனர் சில ‘குடி’மகன்கள்.

“விழுப்புரம் மாவட்டத்தில் 258 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் சாராயக் கடைகளும், புதுச்சேரியில் இருந்து தருவிக்கப்பட்ட மது பாட்டில்களைத் திருட்டுத்தனமாக விற்பனை செய்யும் கடைகளும் 214 என்ற அளவில் உள்ளன” என்று பட்டியிலிடுகிறார் ஒரு பிரபல சாராய வியாபாரி. இந்தச் சாராய விற்பனையைத் தடுக்க முடியாதா என்று விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

“அதிகாரிகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளைச் சார்ந்து இருக்கின்றனர். இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களும், இப்போது ஆட்சியில் இருப்பவர்களும், இதில் நேரடியாகத் தலையிடுகின்றனர். கடந்த திமுக ஆட்சியின்போது, காவல் துறை பெண் அதிகாரி ஒருவர் சாராய வியாபாரம் செய்பவர்களைப் பிடித்தார். உடனே மாஜி அரசியல்வாதி ஒருவரின் மனைவி போன் செய்து, அந்தப் பெண் அதிகாரியைத் திட்டினார்; சம்பந்தப்பட்ட சாராய வியாபாரியை விடச்சொன்னார். இந்த ஆட்சியிலும் அப்படித்தான் நடக்கிறது” என்று தெரிவித்தார். அதே நேரத்தில் எல்லா சாராய வியாபாரிகளுக்கும் அரசியல் பின்புலம் இருப்பதில்லை என்றும், சிலருக்குத்தான் அரசியல்வாதிகள் ஆசி உள்ளது என்றும் அவர் கூறினார். “அதைக் காவல் துறையினர் சிலர் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் அதிகாரிகளும், சட்ட ஒழுங்கு போலீஸ் அதிகாரிகளும் போட்டிபோட்டுக்கொண்டு மாமூல் வாங்கிக் கொழுத்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

விழுப்புரம் சரக டிஐஜி கட்டுப்பாட்டில் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், தீபாவளியின்போது டாஸ்மாக் மது விற்பனை எவ்வாறு இருந்தது? ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 13 ஒன்றியங்கள் அடங்கிய கடலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை ரூ 20.14 கோடி ஆகும். இந்த ஆண்டு தீபாவளிக்கு 22.09 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 22 ஒன்றியங்கள் அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.21.04 கோடி. இந்த ஆண்டு மது விற்பனை ரூ 24.55 கோடி ஆகும். அதே நேரத்தில், டாஸ்மாக் அதிகாரிகள் எதிர்பார்த்த இலக்கு 40 கோடி ரூபாயாக இருந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து டாஸ்மாக் விற்பனை குறைய என்ன காரணம் என்று ஆராய்ந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. டாஸ்மாக் கடைகளுக்குச் சமமாக கள்ளச் சாராய விற்பனையும், புதுச்சேரி மது பாட்டில்கள் திருட்டுத்தனமாக விற்பனையாவதும், ஆர்.எஸ்.சாராயம் மற்றும் மில்லி சாராயம் விற்பனையாவதும் அமோகமாக நடந்து வருவது தெரிய வந்துள்ளது.

திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட எல்லைப் பகுதியில் திலீபன், குமாரி, சேட்டு ஆகியோர் ஆர்.எஸ்.சாராய விற்பனையில் ஈடுபடுவதாகத் தகவல் பதிவாகியுள்ளது. இங்கு, புதுச்சேரி மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்களின் பட்டியலும் தனியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது போன்று திருநாவலூர், செஞ்சி, நல்லான்பிள்ளை பேட்ரால் காவல் நிலையம், சத்தியமங்கலம், ரோசனை, கஞ்சனூர், வடபொன்பரப்பி காவல் நிலையங்களில் சாராய வியாபாரம் மற்றும் புதுச்சேரி மது பாட்டில் விற்பனையைத் தனியாகக் கடைகள் திறந்து விற்பனை செய்பவர்களின் பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குமரவேல், ஏழுமலை, பாலா என்பவர் உட்படப் பலர் ஆர்.எஸ்.சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜெயந்தி, மோகன், பழனி, செல்வம், மணி, தங்கத்துரை, மணிபாலன், ஏழுமலை உட்படச் சிலர் ஆர்.எஸ்.சாராயம் விற்பனை செய்வதாகவும் தகவல் பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைப்பகுதியில், புதுச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்ட மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன. இங்கு ஜிஆர்பி வீதி சாராயம் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாகவும், மில்லி சாராய விற்பனை தொடர்பாகவும் புகார்கள் பதிவாகியுள்ளன.

இதேபோல விழுப்புரம் டவுன் காவல் நிலையம், கானை காவல் நிலையம், சின்னசேலம் காவல் நிலையம், கீழ்க்குப்பம் காவல் நிலையத்தில் புதுச்சேரியில் இருந்து சாராயம் கொண்டுவருபவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கரியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அராக் சாராயம் விற்பனை செய்துவருவதாக மூலக்காடு குமார், ஆணைமதுவு செல்வம், தேர்க்குப்பட்டி பழனி, சின்ன திருப்பதி பெருமாள், கொளஞ்சி, தாழ்ப்பச்சேரி சுப்பிரமணியன், மேலபச்சேரி தேவநாதன், தீர்த்தன், மாயம்படி ராஜா, குரும்பலூர் முருகேசன், கருத்தம்பாளையம் ஏழுமலை ஆகியோர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தியாகதுருகம், கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர், வளவனூர் காவல் நிலையங்களிலும் அராக் சாராய விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

“விழுப்புரம் பெரிய காலனியில் சில்லறை விற்பனையாகவும், மொத்த வியாபாரமாகவும் சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. எந்தக் காலத்திலும் இதனை போலீஸால் கூட தடுக்க முடியவில்லை” என்கின்றனர் அம்மாவட்டக் காவல் துறையினர்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் திருட்டுத்தனமாகக் காய்ச்சப்பட்ட சாராயமும், ஆர்.எஸ்.சாராயமும், அராக் சாராயமும், புதுச்சேரியில் இருந்து தருவிக்கப்பட்ட மது பாட்டில்கள் விற்பனையும் ஜோராக நடைபெறுவதால், டாஸ்மாக் நிறுவனத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதன் மூலமாக அம்மாவட்டக் காவல் துறையினர் வளமாக வாழ்ந்து வருவதாகப் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

டாஸ்மாக் வியாபாரத்தைப் பெருக்க, சாராயப் பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

- மின்னம்பலம் குழு

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon