மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

வேதாரண்யத்தைப் புரட்டிப் போட்ட கஜா

வேதாரண்யத்தைப் புரட்டிப் போட்ட கஜா

கஜா புயல் நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழக மக்களை அச்சத்தில் வைத்திருந்த கஜா புயல் நள்ளிரவு 12.30 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால், நாகை, வேதாரண்யத்தில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வீடுகள் சேதமடைந்துள்ளன; ஆங்காங்கே மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன.

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டதால், மீட்புப்பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மீட்புப்படையினர் இரவோடு இரவாகப் பல இடங்களில் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

”புயல் கரையைக் கடந்தவுடன் உடனடியாக மீட்புப்பணிகள் தொடங்கும். தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது” என நாகை ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், அரசின் அறிவிப்பு வரும் வரை வெளியே வரவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயகுமார். “புயலின் வேகம் குறைந்தாலும், புயல் நின்றுவிட்டதாக யாரும் கருத வேண்டாம். மீண்டும் காற்று வேகம் எடுக்கும் என்பதால் பாதுகாப்பான இடத்திலேயே இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

.6 மணி நேரம்

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது என்று தெரிவித்தார். “புயல் முழுமையாகக் கரையைக் கடக்க, இன்னும் 2 மணி நேரமாகும். புயல் கரையைக் கடந்தபோது, அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மணிக்கு 111 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கஜா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

முகாம்கள்

கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தங்கியிருந்த 81,698 பேர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு 461 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சேதம்

நாகை மாவட்டத்தில், கஜா புயலினால் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. ஏராளமான மரங்கள் கீழே விழுந்துள்ளன. பயிர்கள் நாசமாகியுள்ளன. மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. நம்பியார் நகரில் முழங்கால் அளவு கடல் நீர் உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்தான் கஜா புயலின் கோரத் தாண்டவம் அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

1993ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொடூரப் புயலுக்குப் பின் , தற்போது பெரிய புயலைச் சந்தித்துள்ளது நாகை மாவட்டம். குறிப்பாக, காவேரி டெல்டா பாசனப்பகுதியானது இந்த தலைமுறை சந்திக்காத மாபெரும் பேரிடரை எதிர்கொண்டுள்ளது. 165 கி.மீ. வேகத்தில் திருத்துறைப்பூண்டியில் காற்று வீசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புயல் பாதிப்புக்குள்ளான அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பட்ட முழுமையான பாதிப்பு குறித்து, இன்று காலையில்தான் தெரியவரும் என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாகையிலுள்ள பெரும்பாலான மக்கள், “உயிர் பிழைத்ததே பெரிது” என்று தெரிவித்துள்ளனர். வீட்டின் கதவுகளுக்குப் பெஞ்சுகளை முட்டுக் கொடுத்தும், அரிசி மற்றும் நெல்மூட்டைகளைத் தாங்கலாகக் கொடுத்தும், சில வீடுகளில் ஆண் பெண் எல்லோருமாகச் சேர்ந்து கைகளால் தாங்கிப் பிடித்தும், புயல் பாதிப்பின்போது மக்கள் வீட்டுக்குள் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஜா புயல் காரணமாக 7 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அரியலூர் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon