மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 9 டிச 2019

பயிர்க் காப்பீட்டால் யாருக்குப் பயன்?

பயிர்க் காப்பீட்டால் யாருக்குப் பயன்?

மோடியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளிடமிருந்து காப்பீட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கத்தான் பயன்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் அடுத்தடுத்து இட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், “2016-17ஆம் ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.6460 கோடிப் பணத்தை லாபமாக ஈட்டியுள்ளன. விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து காப்பீட்டு நிறுவனங்கள் கொழுக்கின்றன. விவசாயிகளிடமிருந்து பணத்தைப் பெற்று காப்பீட்டு நிறுவனங்களை லாபமடையச் செய்வதற்குத்தான் இந்தத் திட்டம் என்று காங்கிரஸ் எச்சரித்தது. 2017-18ஆம் ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்களின் லாபம் ரூ.8,000 கோடி முதல் ரூ.9,000 கோடி வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 84 லட்சம் விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) மூலம் தெரிய வந்துள்ளது” என்று மோடி அரசை விமர்சித்துள்ளார்.

சமூக செயற்பாட்டாளரான பிபி.கபூர் பயிர்க் காப்பீடு குறித்த விவரங்களை ஆர்.டி.ஐ. மூலம் பெற்றுள்ளார். அதில், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.15,000 கோடி வரை காப்பீட்டு நிறுவனங்கள் லாபமீட்டியுள்ளதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மோடி அரசு முக்கியத் திட்டங்களில் ஒன்றாக பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை அறிவித்தது. ஆனால் அந்தத் திட்டம் விவசாயிகளைக் காக்கவில்லை; காப்பீட்டு நிறுவனங்களைத்தான் கொழிக்க வைத்துள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் குற்றம்சாட்டியிருப்பது குறித்து இதுவரையில் ஒன்றிய அமைச்சர்கள் யாரும் எந்தக் கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon