மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

நெட்ஃபிளிக்ஸ்: பாதாளம் வரை பாய்ந்த சென்சார்!

நெட்ஃபிளிக்ஸ்: பாதாளம் வரை பாய்ந்த சென்சார்!

நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் தளங்களுக்குத் தணிக்கை கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியானதையடுத்து, அதற்கு நெட்ஃப்ளிக்ஸ் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் திரைப்படங்கள், சீரியல்களைத் தாண்டி உலகளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாக வெப் சீரியஸ் என்னும் வகையரா நிகழ்ச்சிகள் கவனம் பெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் கவர்ந்த ஒன்றாக உள்ளது. இந்த வெப் சீரியஸ் தொடர்களை ஒளிபரப்புவதில் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமெசான் போன்ற நிறுவனங்கள் உலக புகழ் பெற்றவை.

இதில் சிறப்பம்சமாக அமைந்திருப்பது சென்சார் இல்லாமல் இருப்பதுதான். காரணம் ஒரு படைப்பாளி தனது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் தளமாக இதைப் பயன்படுத்துவதே.

இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் தணிக்கை கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக எழுந்துள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்றவை தணிக்கை செய்ய வேண்டும் என்ற முடிவை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.

மேலும், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டும் உலகம் முழுக்க பின்பற்றப்படக்கூடிய சில விதிமுறைகளைப் பின்பற்ற முடிவெடுத்துள்ளதாகவும், அவர்களே தயாரிக்கக்கூடிய உள்ளடக்கத்துக்கு சுய ஒழுங்குமுறையும் நெறிமுறைகளையும் வகுக்க உள்ளது மட்டுமின்றி தகவல் தொடர்பு அமைச்சகம் கூறிய வழிகாட்டுதல்களையும் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக இரண்டு பெயரிடப்படாத அமைச்சர்கள் கூறியதாக தி பிரிண்ட் ஊடகத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் மட்டுமின்றி 21 சென்சுரி பாஃக்ஸ், இன்டெல் சாட், AFNT இந்தியா, இன்டெல் இந்தியா, கூகுள், ஸ்டார் டி.வி இந்தியா, ஆப்பிள் மற்றும் அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் ஆகிய அமைப்புகளும் பங்கேற்றன என்ற தகவலும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, இந்தச் செய்தி பரவிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். அந்த இணையதளத்தில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்றும். அந்தக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளவே இல்லை என நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon