மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

துப்புரவுத் தொழிலாளிக்குப் பண பலன்: உத்தரவு!

துப்புரவுத் தொழிலாளிக்குப் பண பலன்: உத்தரவு!

தற்காலிக துப்புரவுத் தொழிலாளிக்குப் பண பலன்கள் பெற உரிமை இல்லை என்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்கக் கல்வி உதவி அலுவலர் அலுவலகத்தில் தற்காலிக துப்புரவுத் தொழிலாளியாக, 1983ஆம் ஆண்டு மாதம் 60 ரூபாய் ஊதியத்திற்குப் பணியில் சேர்ந்தார் சந்திரா. இவர் தன் பணிப் பலன்களைக் கோரி, தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், 90,117 ரூபாயை பணப் பலனாக வழங்க வேண்டும் என தொடக்கக் கல்வி உதவி அலுவலருக்கு உத்தரவிட்டது தொழிலாளர் நீதிமன்றம்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கல்வித் துறை சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது. தற்காலிகப் பணியாளர்கள் பணப் பலன்கள் கோர உரிமையில்லை எனவும், தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதி எஸ்.விமலா அமர்வு முன்பு, நேற்று (நவம்பர் 16) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியில்லாமல் அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து அவர் துடைப்பத்தை எடுத்து வேலை செய்யவில்லை என்று தெரிவித்த நீதிபதி, இத்தனை ஆண்டுகள் பணி செய்ய அனுமதித்து விட்டு, தற்போது அவரது பணி சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்று கூறினார்.

தற்காலிகத் தொழிலாளர்களுக்குப் பண பலன்களைப் பெற உரிமை இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது எனக் கூறி, தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி விமலா. மேலும், சந்திராவுக்குச் சேர வேண்டிய 90,117 ரூபாயை 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon