மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

புயல் பாதிப்பு: களத்தில் எம்.எல்.ஏ.!

புயல் பாதிப்பு: களத்தில் எம்.எல்.ஏ.!

கஜா புயலால் நாகப்பட்டினம் மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. ஏராளமான மரங்கள் கீழே விழுந்துள்ளன. பயிர்கள் நாசமாகியுள்ளன. மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்தது.நாகை ரயில் நிலையமும் பலத்த சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், நாகை சட்டமன்ற உறுப்பினரான தமிமுன் அன்சாரி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேற்று இரவு நேரில் சென்று சந்தித்த தமிமுன் அன்சாரி அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்தார்.

பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட அமைச்சர் ஓ.எஸ் .மணியன் ஆகியோருடன் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் அவர் பேசியுள்ளார். அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், தயார் நிலையில் இருக்குமாறு அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியுள்ளார்.

அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பகுதிக்கு சென்று மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பது குறித்தும் தமிமுன் அன்சாரி கேட்டறிந்துகொண்டார்.

புயல் சேதம் குறித்து தனது முகநூல் பக்கத்தில், “80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மீட்புக் குழுவோடு அனைத்து முகாம்களுக்கும் சென்று பார்வையிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளதோடு தனது எம்.எல்.ஏ. அலுவலகம் புயலால் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புயலால் சேதமடைந்த பகுதிகளுக்கு இன்று (நவம்பர் 16) காலை நேரில் சென்ற அவர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

41 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகப் பெரிய புயலை நாகை மாவட்டம் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிமுன் அன்சாரி, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் நாகை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தனது முகநூல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon