மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

கலைஞனை கௌரவிக்கும் டில்லி அரசு!

கலைஞனை கௌரவிக்கும் டில்லி அரசு!

டில்லியில் இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது அதே நாளில் டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை டில்லி அரசு நடத்துகிறது.

டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி டில்லி சாணக்யாபுரியில் உள்ள நேரு பார்க்கில் நாளை (நவம்பர் 17) நடைபெற இருந்தது. நிகழ்ச்சியை விமான நிலையங்கள் ஆணையமும் (AAI), ஸ்பிக் மெக்கே (SPIC-MACAY) நிறுவனமும் இணைந்து இரு நாள்கள் நடத்த திட்டமிட்டிருந்தன.

டி.எம்.கிருஷ்ணா கிறிஸ்தவ பாசுரங்கள், பாடல்களை கர்னாடக இசையில் பாடுவதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால் அவரை ‘ஆன்டி இந்தியன்’,‘அர்பன் நக்சல்’ என்ற பெயரில் இந்துத்துவ அமைப்பினர் விமர்சித்து வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பால் டில்லி இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

தற்போது டி.எம்.கிருஷ்ணா டில்லி, சாக்கெட்டில் உள்ள ‘கார்டன் ஆஃப் ஃபைவ் சென்ஸ்’ எனும் இடத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதை டில்லி அரசின் கீழ் இயங்கும் சாகித்ய கலா பரிஷத் ஒருங்கிணைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா, “கலைஞர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது. கலை மற்றும் கலைஞர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டியது முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக டி.எம்.கிருஷ்ணா நிகழ்ச்சி ரத்தான போது, “நவம்பர் 17ஆம் தேதி டில்லியில் எங்கு இடம் அளித்தாலும் நான் பாடத் தயாராக இருக்கிறேன். இத்தகைய அச்சுறுத்தல்களால் நாம் பதட்டப்படக்கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பால் நிகழ்ச்சியை ரத்து செய்த போது இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மொகபாட்ரா, “சில அவசரநிலைகள் வந்துவிட்டன, அதனால் அந்த நாளில் நடத்த முடியவில்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon