மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

ஓசூர்: மீண்டும் ஒரு ஆணவக்கொலை!

ஓசூர்: மீண்டும் ஒரு ஆணவக்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த காதல் ஜோடியொன்று கர்நாடக மாநில காவிரி ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் ஆணவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளியைச் சேர்ந்தவர் நந்தீஷ் (வயது 25). ஓசூரில் மெக்கானிக் வேலை செய்து வரும் இவர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அதேபகுதியில் மாற்றுச் சமூகத்தை சேர்ந்த சுவாதியை, நந்தீஷ் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இவர்கள் இருவரது காதலுக்கு, வழக்கம் போல சாதி பெரும் தடையாக வந்தது. இதனால், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறிக் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று, சூளகிரியில் தங்களின் காதல் திருமணத்தைச் சட்டப்படி பதிவு செய்தனர். சுவாதி வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, இருவரும் ஓசூரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். இந்தக் காதல் திருமணத்தை ஏற்காமல் சுவாதியின் பெற்றோர் கடுமையான கோபத்தில் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

நவம்பர் 10ஆம் தேதியன்று சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வேங்கடேசன், சித்தப்பா உள்ளிட்டோர், நந்தீஷ் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த நான்கு நாட்களாக நந்தீஷ், சுவாதி ஆகிய இருவரையும் காணவில்லை என நந்தீஷின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர் போலீசார். இதற்கிடையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஜலஹள்ளி பகுதி காவிரி ஆற்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இந்தத் தகவலையடுத்து, அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஓசூரைச் சேர்ந்த நந்தீஷ், சுவாதி இருவரும் சடலமாகக் கிடைத்தது உறுதி செய்யப்பட்டது. நந்தீஷ், சுவாதியின் உடல்களில் பலத்த காயங்கள் இருந்ததோடு, அவர்களது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. இரு சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து, ஜலஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பெண்ணின் தந்தை உட்பட ஆறு பேர் இந்தக் கொலை விவகாரத்தில் தொடர்புடையதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பெண்ணின் தந்தை சீனிவாசன் உட்பட மூன்று பேரை கைது செய்தனர் ஜலஹள்ளி போலீசார். தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon