போலி பட்டச் சான்றிதழ் அளித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு மாணவர் சங்கத் தேர்வில் ஏபிவிபி சார்பாக போட்டியிட்டுத் தலைவரான அன்கிவ் பைசோயா அந்தப் பதவியிலிருந்து நேற்று (நவம்பர் 15) நீக்கப்பட்டார்.
அன்கிவ் பைசோயா என்ற மாணவர் பாஜகவின் மாணவர் அமைப்பின் உறுப்பினராவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்ததாக ஒரு போலிச் சான்றிதழைத் தயாரித்து அதை வைத்து டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு நடந்த பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று தலைவராகி விட்டார். அந்தத் தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பாக சன்னி சில்லார் என்பவரும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், அன்கிவ்வின் கல்வித்தகுதி குறித்து சந்தேகங்கள் எழுந்தன. இதனால் அன்கிவ் படித்ததாகக் கூறப்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விளக்கம் கேட்கப்பட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அன்கிவ்வின் சான்றிதழைப் பரிசோதித்துவிட்டு அது போலிச் சான்றிதழ் என்று உறுதி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
உயர் நீதிமன்றமும் அன்கிவ்வின் பட்டமானது உண்மையானதுதானா என்று பரிசோதித்து கூற வரும் 20ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்தது. இதனைத்தொடர்ந்து ஏபிவிபி அமைப்பே அன்கிவ்வை மாணவர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் அவருடைய வழக்கு முடியும்வரை ஏபிவிபியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அன்கிவ்வை நீக்குவதாக அறிவித்துள்ளது.