மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

உலகக் கோப்பை: ரவி சாஸ்திரி முக்கியத் தகவல்!

உலகக் கோப்பை: ரவி சாஸ்திரி முக்கியத் தகவல்!

உலகக் கோப்பையில் விளையாடவுள்ள இந்திய அணி குறித்த முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு சரியான வீரர்களைத் தேர்வு செய்யும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது இந்திய அணி. இந்தக் காலகட்டத்தில் திறமைமிக்க பல புதிய வீரர்களை இனம் கண்டு அணிக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதுபோல ஃபார்மில் இல்லாத பல வீரர்களை அணியிலிருந்து கழற்றியும் விட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அதற்கான பணிகளை பிசிசிஐ முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நேற்று (நவம்பர் 15 ) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "உலகக் கோப்பையில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியைத் தேர்வு செய்வதற்கான பணிகள் முடிந்துவிட்டன. புதிதாக இனி எந்த மாற்றமும் செய்யப்படப் போவதில்லை. இந்த 15 பேர் கொண்ட அணி குழுவாக இணைந்து எப்படி போட்டித் தொடரை எதிர்கொள்ளப் போகிறது எனும் விஷயம் குறித்துதான் எங்களது கவனம் தற்போது உள்ளது" எனக் கூறியுள்ளார்.

இனி புதிதாக எந்த மாற்றமும் அணித் தேர்வில் இல்லையெனக் கூறியிருப்பதால் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிக் கவனம் பெற்று தத்தமது இடங்களை உலகக் கோப்பைக்கான இந்திய லெவனில் உறுதி செய்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon